Cricket
பாபர் அசாமுக்கு ரூ. 2 கோடியில் சொகுசு கார்.. சந்தேகம் எழுப்பும் செய்தியாளர்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்கா மற்றும் இந்தியா அணிகள் இடையே தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து லீக் சுற்றோடு வெளியேறியது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் மிக மோசமான தோல்வியை தழுவியது அந்நாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்களின் கோபத்தை தூண்டியுள்ளது.
முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவிய போதிலும், கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. எனினும், தொடரில் இருந்து வெளியேறிய பிறகு, எத்தனை வெற்றிகள் பெற்றும் பயனில்லை என்ற வகையில் பலரும் அந்த அணியை கடுமையாக சாடி வருகின்றனர்.
தொடரில் இருந்து வெளியேறியதில் இருந்தே பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மற்றும் அந்நாட்டு வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு அவரது சகோதரர் விலை உயர்ந்த சொகுசு காரை பரிசளித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
அந்த வகையில், பாகிஸ்தானை சேர்ந்த மூத்த செய்தியாளர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவில் அவர், “பாபர் அசாமுக்கு புதிய இ டிரான் கார் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை அவரது சகோதரர் பரிசளித்ததாக பாபர் அசாம் கூறுகிறார். ஆனால் ரூ. 7 முதல் ரூ. 8 கோடி (பாக். விலை) வரை விலை கொண்ட காரை பரிசளிக்கும் அளவுக்கு அவரின் சகோதரர் என்ன செய்கிறார் என்று வியப்பாக இருந்தது.”
“பிறகு ஒருவர் என்னிடம் கூறினார், சிறிய அணிகளுடன் தோற்றால் உங்களுக்கு பிளாட்டுகள், கார்கள் கிடைக்காது. பிறகு யாருக்கு கிடைக்கும்? இவை கடுமையான குற்றச்சாட்டுகள் என்று அந்த நபரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அனைவருக்கும் யார் என்ன செய்கிறார்கள் என்பது தெரியும் என்று தெரிவித்தார்,”
செய்தியாளரின் இந்த குற்றச்சாட்டுக்கு சிலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரௌஃப் மற்றும் ரசிகர் இடையே வாக்குவாதம் அரங்கேறிய நிலையில், தற்போது அந்த அணியின் கேப்டன் குறித்து மிகப்பெரிய குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதை அந்நாட்டு ரசிகர்கள் வெகு சீக்கிரம் கடந்துவிடுவார்கள் என்று தெரியவில்லை.