Cricket
தங்களுக்கு தானே உணவு சமைத்துக் கொள்ளும் ஆப்கன் வீரர்கள் – ஏன் தெரியுமா?
டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி உள்ள ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அமெரிக்காவை தொடர்ந்து சூப்பர் 8 சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் பார்படோஸில் நடைபெறுகிறது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் தங்களுக்கான உணவை அவர்களே சமைத்துக் கொள்ளும் தகவல் வெளியாகி உள்ளது. அழகிய கடற்கரையை ஒட்டிய பார்படோஸில் பெரும்பாலான இடங்களில் ஹலால் உணவு கிடைப்பதில்லை என்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இது தொடர்பாக அவர்கள் அதிக பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தனர்.
கரீபியன் பகுதிகளை ஒட்டிய இடங்களில் ஹலால் இறைச்சி கிடைக்கின்றன. எனினும், அனைத்து உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களிலும் அவை கிடைக்கும் என்று உறுதியாக கூறிவிட முடியாது. இதன் காரணமாகவே அவர்களுக்கான உணவை அவர்களே சமைத்துக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய ஆப்கன் வீரர் ஒருவர், “எங்களது விடுதியில் ஹலால் இறைச்சி கிடைக்கவில்லை. இதனால் சில சமயங்களில் எங்களுக்கான உணவை நாங்களாகவே சமைத்துக் கொள்கிறோம். இந்தியாவில் நடைபெற்ற கடந்த உலகக் கோப்பை தொடரின் போது எங்களுக்கு இந்த விவகாரத்தில் எந்த குறையும் ஏற்படவில்லை. அங்கு ஹலால் மாட்டிறைச்சி பிரச்சினையாக இருந்ததில்லை.”
“செயிண்ட் லூசியாவில் ஹலால் உணவை சாப்பிட்டோம், ஆனால் அனைத்து இடங்களிலும் இது சாத்தியப்படவில்லை. ஒரு நண்பர் தான் எங்களுக்கு இதனை ஏற்பாடு செய்து கொடுத்தார். இதைத் தொடர்ந்து எங்களுக்கான உணவை நாங்களே சமைத்துக் கொள்கிறோம்,” என்று தெரிவித்தார்.