Connect with us

Cricket

ஆல்ரவுண்ட் ஹர்திக்; குல்தீப்பின் மாயாஜால சுழல்… அரையிறுதியை நெருங்கும் இந்தியா!

Published

on

வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்டது.

ஆண்டிகுவா பார்படாவில் உள்ள நார்த் சவுண்ட் மைதானத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்திய அணியை பேட் செய்ய பணித்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் பேட்டர்களின் சிறப்பான பங்களிப்பால் ரன்களையும் குவித்தது.

தொடக்கத்தில் அதிரடி காட்டிய ரோஹித் 23 ரன்களிலும் விராட் மற்றும் பண்ட் முறையே 37 மற்றும் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பிய சூர்யகுமார் யாதவ், இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தாலும் ஹர்திக் – ஷிவம் துபே ஜோடி இன்னிங்ஸை நிதானமாக்கியது. இறுதியில் இருவருமே அதிரடி காட்டிய நிலையில் இந்திய அணி, 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. கடைசி பந்தில் பவுண்டரி அடித்த ஹர்திக் அரைசதம் விளாசினார். ஷிவம் துபே 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

197 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. டன்ஸிட் ஹசன் 29 ரன்கள் எடுக்க, கேப்டன் ஷாண்டோ 40 ரன்களும் எடுத்தனர். இறுதிகட்டத்தில் ரிஷாத் ஹூசைன் 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தது வங்கதேச வெற்றிக்கு உதவி செய்யவில்லை. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து, அரையிறுதி வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்டது.

google news