Cricket
பும்ரா ரிசர்வ் பேங்க் மாதிரி – புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். மிகமுக்கிய போட்டிகளில் இந்திய அணி வெற்றிக்கு இவரது பந்துவீச்சு காரணமாகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக பும்ரா எடுத்த மூன்று விக்கெட்டுகள் இந்த தொடரில் அவரது சிறந்த பந்துவீச்சுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
பாகிஸ்தான் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவரின் 4/7 இந்திய வெற்றியை உறுதிப்படுத்தியது. பும்ரா குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் பேசும் போது, அவரை ரிசர்வ் வங்கியுடன் ஒப்பிட்டார்.
இது குறித்து பேசிய அவர், அவர் இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்றவர். அவர் மிக பாதுகாப்பானவர். எந்த விதமான சூழலிலும் நான்கு ஓவர்களை வீசும் போது அவரை எதிர்பார்க்கலாம். அவர் போட்டியை அருமையாக செட்டப் செய்கிறார். அவர் அதை எப்படி செய்கிறார்? முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 12 ரன்களை கொடுக்கிறார். இதனால் ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆதிக்கம் செலுத்த துவங்குகிறது.
அடுத்த ஓவரை வீசிய பும்ரா, போட்டியை தனக்கு சாதகமாக மாற்றுகிறார். அவர் எடுத்த விக்கெட்டுகள், அவர் வெவ்வேறு கட்டங்களில் வீசிய விதம், முதல் ஆறு ஓவர்களில் ஆறு முறை ஸ்லோ பால் வீசுகிறார். இதன் மூலம் அவர் பௌலிங் டோனை கட்டமைக்கிறார். உலக கிரிக்கெட்டில் இவரை போன்று வேறு யாரும் பௌலிங் டோனை சிறப்பாக செட் செய்வதில்லை, என்றார்.