latest news
என்னது ஆளுநர் ரவி அப்படிச் சொன்னாரா… காட்டமாக மறுப்புத் தெரிவித்த ஆளுநர் மாளிகை!
குலதெய்வ வழிபாட்டைத் தடை செய்ய வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாகக் கூறி செய்தி போலியானது என ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குலதெய்வ வழிபாட்டைத் தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ரவி பேசியதாக ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், அது போலி செய்தி என ஆளுநர் மாளிகை விளக்கமளித்திருப்பதோடு, இதுபோன்ற தகவல்களைப் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராய சாவுகளுக்கு அடிப்படை காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோயில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும் – ஆளுநர் ரவி’ என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்படுகின்றன
இந்த விஷயத்தில் இதுபோன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலும் மறுப்பதோடு, தவறான நோக்கத்தோடு பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பும் செயல் மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்துகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.