tech news
பார்க்க போட்டோ ஃபிரேம், ஆனா பாட்டு பாடும்.. சாம்சங் அசத்தல்
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மியூசிக் ஃபிரேம் சாதனத்தை அறிமுகம் செய்தது. தோற்றத்தில் போட்டோ ஃபிரேம் போன்றே இந்த சாதனம் காட்சியளிக்கும். ஆனால், இந்த சாதனம் கொண்டு பாடல்களை கேட்டு மகிழலாம். பயனர் தங்களின் புகைப்படங்களை சுவரில் தொங்கவிட்டபடி, விரும்பிய பாடல்களை கேட்கலாம்.
புதிய மியூசிக் ஃபிரேம் அதிக துல்லியமான, தலைறிந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் டால்பி அட்மோஸ் 2.0 சேனல், சரவுண்ட் சவுண்ட் வசதி உள்ளது. இந்த ஃபிரேம் – வயர்லெஸ் ஸ்பீக்கரில் மொத்தம் ஆறு ஸ்பீக்கர்கள் உள்ளன. இதனை வால் மவுண்ட் முறையில் சுவற்றில் மாட்டவும் முடியும், டேபில்டாப் முறையிலும் இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும்.
இந்த ஸ்பீக்கரில் ஒரு அறைக்குள் தேவையான ஆடியோவை வெளிப்படுத்தும் திறன் உள்ளது. இதில் உள்ள ஸ்பீக்கர்கள் மூன்று வழிகளில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிநவீன ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
இதில் பில்ட் இன் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகளான அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு ஃபிரேமை தொடாமலேயே ஸ்பீக்கரை இயக்கலாம். இந்த ஃபிரேம் – வயர்லெஸ் ஸ்பீக்கர் ஏர்பிளே 2 வசதியை கொண்டுள்ளது.
சாம்சங் மியூசிக் ஃபிரேமில் ஸ்பேஸ்ஃபிட் சவுண்ட் ப்ரோ வசதியும், வயர்லெஸ் ஸ்டீரிமிங் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், இதில் ஆடியோ அட்ஜஸ்ட்மெண்ட்களை ஸ்மார்ட்திங்ஸ் ஆப் மூலம் இயக்கலாம்.
இந்தியாவில் சாம்சங் மியூசிக் ஃபிரேம் விலை ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த சாதனத்தை ரூ. 23,990 விலையில் வாங்கிட முடியும். விற்பனை அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.