latest news
45கிமீ வேகம், 48 கிமீ ரேஞ்ச் – ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
ஹோண்டா நிறுவனம் EMI E எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கி இருக்கிறது. இது ஹோண்டா நிறுவனம் உற்பத்தி செய்த முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். 2025 ஆண்டிற்குள் பத்து வெவ்வேறு எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை வெளியிட இருப்பதாக ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஹோண்டா EMI E எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 1.7 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது. இது 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மேலும் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு யமஹா நிறுவனம் அறிமுகம் செய்த நியோ இ ஸ்கூட்டருக்கு போட்டியாக புதிய ஹோண்டா EMI E எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விளங்குகிறது.
புதிய ஹோண்டா EMI E எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹோண்டா நிறுவனம் சொந்தமாக உருவாக்கி இருக்கும் கழற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஹோண்டா மொபைல் பவர் பேக் இ என்று அழைக்கப்படுகிறது. ஸ்கூட்டரில் உள்ள பேஸ் மோட் இகான் (econ) தேர்வு செய்தால் 48 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் கிடைக்கும். இந்த ஸ்கூட்டரை இரண்டு மணி நேரத்தில் 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணி நேரங்கள் ஆகும்.
வைட், சில்வர் மற்றும் பிளாக் என்று மூன்று வித நிறங்களில் ஹோண்டா EMI E எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலில் முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக்குகள் உள்ளன. இதில் உள்ள சஸ்பென்ஷன் சிஸ்டம்- டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டுவின் ஷாக்குகளை கொண்டிருக்கிறது.
அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு எப்போது நடைபெறும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இதன் விலை பற்றியும் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், ஹோண்டா EMI E ஸ்கூட்டரின் விலை குறைவாகவும், அதிக போட்டியை ஏற்படுத்தும் வகையிலும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.