Cricket
சர்வதேச டி20 பேட்ஸ்மென் – முதலிடத்தை இழந்த சூர்யகுமார் யாதவ்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முன்னணி பேட்டர் என்ற பெருமையை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இழந்துள்ளார். தற்போது உலகின் முன்னணி டி20 பேட்டராக ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் முன்னேறி அசத்தினார். கடந்த ஆண்டு டிசம்பர் 2023 முதல் உலகின் முன்னணி டி20 பேட்டர் ஆக இருந்த சூர்யகுமார் யாதவ் தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் இரண்டு அரைசதங்களுடன் மொத்தம் 255 ரன்களை குவித்தார். இதில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிராக அவர் அடித்த 76 ரன்களும் அடங்கும். இவர் தற்போது 844 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.
இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் தான் இழந்த முதலிடத்தை மீண்டும் பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. முன்னணி டி20 பேட்டர்கள் பட்டியலில் டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவ் வரிசையில், பில் சால்ட், பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 44 இடங்கள் முன்னேறி முன்னணி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 24 ஆவது இடத்தில் உள்ளார். இவரின் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 11 ஆவது இடத்தில் உள்ளார். ஸ்பின் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் 8-ஆவது இடத்தில் உள்ளார். இவர் தற்போது இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளராக இருக்கிறார்.