Connect with us

Cricket

13 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பை… டி20 சாம்பியனான இந்திய அணி!

Published

on

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்படாஸில் நடந்த பரபரப்பான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, டி20 சாம்பியனாக முடிசூடியது.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. டாஸ்வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, பவர்பிளேவில் ரோஹித், ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து கைகோர்த்த விராட் கோலி – அக்சர் படேல் ஜோடி இந்திய அணியின் ரன் வேகத்தை சீரான வேகத்தில் உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல், 47 ரன்கள் எடுத்து எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த வந்த ஷிவம் துபே விராட் கோலிக்கு கம்பெனி கொடுக்க அவரும் ஆக்‌ஷன் மோடுக்கு மாறினார்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன் விளையாடிய 8 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த விராட் கோலி, இந்த ஒரே போட்டியில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். ஒரு கட்டத்தில் 150 ரன்கள் எடுக்க முடியுமா என்று நினைத்திருந்த இந்திய அணி 20 ஓவர்களில் 176 என்கிற சவாலான ஸ்கோரை எட்டியது.

முதல்முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய தென்னாப்பிரிக்கா பவர்பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் டிகாக்கும் ஸ்டப்ஸும் எதிர் தாக்குதல் ஆட்டம் ஆடினர். ஸ்டப்ஸ், டிகாக் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் மறுமுனையில் ஹென்ரிச் கிளாஸன் மிரட்டலான ஆட்டம் ஆடினார். கடைசி 7 ஓவர்களில் 68 ரன்கள் தேவை என்கிற நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் வீசிய 14-15வது ஓவர்களில் மட்டுமே தென்னாப்பிரிக்கா 38 ரன்களை எடுத்தது. குறிப்பாக அக்சரின் 15-வது ஓவரில் மட்டும் 24 ரன்கள் கிடைத்தது.

கடைசி 5 ஓவர்களில் 30 ரன்கள் என்ற நிலையில், கிட்டத்தட்ட மேட்ச் இந்தியாவின் கையைவிட்டு போய்விட்டது என்றே நினைத்தனர். ஆனால், 16-வது ஓவரை வீசிய பும்ரா, கடைசி வரைக்கும் சண்ட செய்வோம்னு தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தார். 17-வது ஓவரில் கிளாசன் விக்கெட்டை வீழ்த்தி பாண்டியாவும் மறுமுனையில் பிரஷரை ஏற்றினார்.

அடுத்த ஓவரில் மார்கோ யான்சனை வீழ்த்தியதோடு 2 ரன்களை மட்டுமே பும்ரா விட்டுக்கொடுத்தார். இதனால், கடைசி 2 ஓவர்களில் 20 ரன் தேவை. 19-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் தனது பங்குக்கு நெருக்கடியை அதிகரித்ததோடு 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க, கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவுக்கு 16 ரன்கள் தேவை. 16-19 இடையிலான 4 ஓவர்களில் இந்தியா 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் எடுத்தது மேட்சின் திருப்புமுனையாக அமைந்தது. பாண்டியா வீசிய முதல் பந்தில் சூர்யகுமார் பவுண்டரி லைனில் அட்டகாசமான கேட்ச் பிடித்து கில்லர் மில்லரை வெளியேற்ற இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2007-க்குப் பிறகு இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது.

google news