latest news
Hizb-ut-Tahrir case: ரேடாரில் சிக்கிய 2 பேர்… தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!
தடைசெய்யப்பட்ட Hizb-ut-Tahrir தீவிரவாத அமைப்பு தொடர்பான வழக்கில் சென்னை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
Hizb-ut-Tahrir வழக்கு
கடந்த 2021-ல் மதுரையைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான Hizb-ut-Tahrir உடன் தொடர்பில் இருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஃபேஸ்புக்கில் `காழிமார் தெருவில் தூங்கா விழிகள் ரெண்டு’ என்கிற கணக்கு மூலம் பிரிவினைவாதக் கருத்துகளைப் பதிவிட்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது மதுரை திடீர் நகர் காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டது.
இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரித்த என்.ஐ.ஏ அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது. இதில், சென்னையைச் சேர்ந்த ஹமீது ஹூசைன், அவரின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரஹ்மான் மற்றும் முகமது மௌரீஸ், காதர் நவாஸ் ஷெரீஃப், அகமது அலி ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
புதுக்கோட்டையை அடுத்த மண்டையூரில் விவசாய நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்திருந்த அகமது கான் மற்றும் தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரைச் சேர்ந்த அகமது என்கிற இரண்டு பேரைக் குறிவைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.