Cricket
முதலாவது டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 603 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகளான ஷஃபாளி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி அபாரமான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 205 மற்றும் 149 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஷுபா சதீஷ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பிறகு வந்த ஜமெமியா ரோட்ரிக்ஸ் 55 ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 69 ரன்களையும் அடுத்து வந்த ரிச்சா கோஷ் 86 ரன்களையும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் டெல்மி டக்கர் 2 விக்கெட்டுகளையும் நடைன் டி கிலெர்க், துமி ஷெகுன் மற்றும் நான்குலெகோ லாபா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா அபார பந்துவீச்சு:
அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 266 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அந்த அணி சார்பில் கேப்டன் லாரா 20 ரன்களையும், அனெக் போஷ் 39 ரன்களையும் சேர்த்தனர். அடுத்து வந்த சூன் லஸ் 65 ரன்களையும், மரிசேன் கப் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் தவிர நடைன் டி கிலெர்க் மட்டுமே 39 ரன்களை அடித்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்னே ரானா 8 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மிக குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனதை தொடர்ந்து இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாளோ ஆன் கொடுத்தது.
தென் ஆப்பிரிக்கா நிதானம்:
அதன்படி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக ஆடியது. அந்த அணியின் துவக்க வீராங்கனையும், கேப்டனுமான லாரா 122 ரன்களை விளாசினார். அடுத்து வந்த சுன் லஸ் 109 ரன்களை விளாசினார். இவர்கள் தவிர மரிசேன் கப் 31 ரன்களையும், டி கிலெர்க் 61 ரன்களையும் சேர்த்தனர்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 373 ரன்களை சேர்த்து இருந்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்னே ரானா, தீப்தி ஷர்மா மற்றும் ராஜேஷ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பூஜா வஸ்தராக்கர், ஷஃபாளி வெர்மா மற்றும் ஹர்மன்பிரீத் கௌர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 37 எனும் மிக எளிய இலக்கை துரத்தியது. இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஷுபா சதீஷ் மற்றும் ஷஃபாளி வெர்மா முறையே 13 மற்றும் 24 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
இதைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி சென்னையில் ஜூலை 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.