latest news
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு.. 5 நிமிடத்தில் காலியான டிக்கெட்டுகள்.. பயணிகள் ஏமாற்றம்..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு அதிகளவு ரயில் பயணத்தை விரும்புவார்கள். ஏனென்றால் பஸ் கட்டணத்தை காட்டிலும் ரயில் கட்டணம் குறைவு என்பதாலும், குறித்த நேரத்திற்கு பயணம் என்பதாலும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஆசைப்படுவார்கள். அவர்கள் பண்டிகைக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 28, 29, 30 தேதிகளில் சொந்த ஊர் செல்வதற்கு திட்டமிடுவார்கள் என்பதால் ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. அதன்படி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அக்டோபர் 29ஆம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு திங்கட்கிழமை காலை தொடங்கி விரைவாக விற்றுதீர்ந்து விட்டது.
இந்நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் 5 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டன. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்ததால் பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தன. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், பொதிகை விரைவு ரயில் போன்றவற்றில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் இரண்டு நிமிடத்திலேயே முன்பதிவு முடிந்து விட்டது. அக்டோபர் 31ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.