latest news
உ.பி-யில் ஆன்மீக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம்.. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..!
ஹத்ராசில் ஆன்மீகக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அம்மாநில முதல்வர் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இருக்கும் புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் இந்துமத பிரச்சாரக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்வில் ஏகப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது .அதிலும் பெரும்பாலானோர் பெண்கள் என்று கூறுகிறார்கள்.
மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர். அவர்களை பஸ் மற்றும் வேன்கள் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் உயிரிழந்த நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் மீட்பு பணி வீரர்களை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரிதமாக செயல்படுமாறு உத்தரவிட்டிருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் ஆன்மீக நிகழ்வில் கூட்டு நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் இதில் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை செய்ய உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.