latest news
மனித உயிர்களை பலி வாங்கிய கள்ளக்குறிச்சி ‘விஷ சாராயம்’… சற்றுமுன் வெளியான லேப் ரிப்போர்ட்…
கள்ளக்குறிச்சியில் மனித உயிர்களை பலி வாங்கிய விஷ சாராய லேப் ரிப்போர்ட் தற்போது வெளியாகி இருக்கின்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதி, மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் சாப்பிட்ட பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரும் தொடர்ந்து உயிரிழந்து வருகிறார்கள். இதனால் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
மேலும் கள்ள சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை போன்றவற்றில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 21 பேர் கைது செய்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாமஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை விஷ சாராயம் சாப்பிட்டு 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது லேப் ரிப்போர்ட் வெளியாகியிருக்கின்றது. கள்ளக்குறிச்சியில் மனித உயிர்களை பலி வாங்கிய விஷ சாராயத்தில் தண்ணீரில் 8.9% முதல் 29% வரை மெத்தனால் கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தண்ணீரில் 4.5% மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிர்களை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் நடந்த மரக்காணம் விஷ சாராய மரணத்தில் 16 % மெத்தனால் கள்ளச்சாராயத்தில் கலந்திருந்தது குறிப்பிடத்தக்கது.