tech news
இந்திய சேவையை நிறுத்துகிறோம்.. கூ அறிவிப்பு
இந்தியாவின் சமூக வலைதளம்- கூ இந்தியாவில் தனது சேவைகளை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க முடியாமல் போனது, கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்டவைகளே கூ மூடப்படுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட தளம் தான் கூ. இந்த தளத்தில் பயனர்கள் பல்வேறு இந்திய மொழிகளில் தகவல்கள் மற்றும் கருத்துக்களை பதிவிட முடியும். கூ சேவை நிறுத்தப்படுவதாக அதன் நிறுவனர்களான அப்ராமையா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடவாட்கா ஆகியோர் லிங்க்டுஇன் பதிவில் உறுதிப்படுத்தினர்.
“மிகப்பெரிய இண்டர்நெட் நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் என பலரிடம் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தினோம். எனினும், நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை,” என்று அந்த பதிவில் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தியாவில் கூ சேவை துவங்குவதற்காக டைகர் குளோபல், அக்செல், 3ஒன்4 கேப்பிட்டல், மிரே அசெட் மற்றும் புளூமெ என பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்தன. இந்த நிறுவனத்தில் இதுவரை 60 மில்லியன் இந்திய மதிப்பில் ரூ. 500 கோடிக்கும் அதகமான தொகை முதலீடு செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாத வாக்கில் கூ நிறுவனம் டெய்லிஹண்ட் உடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. எனினும், இரு நிறுவனங்கள் இடையே கூட்டணி உருவாகவில்லை.
துவங்கப்பட்ட காலக்கட்டத்தில் கூ செயலி 60 மில்லியனுக்கும் அதிக டவுன்லோட்களை கடந்தது. ஒவ்வொரு மாதமும் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் கூ சேவையை பயன்படுத்தி வந்தனர். தினமும் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2.3 மில்லியனாக இருந்தது. இதில் ஒவ்வொரு மாதமும் 10 மில்லியனுக்கும் அதிக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.