latest news
இந்தி திணிப்பை எதிர்க்கிற நீங்க, உருது திணிப்பை மட்டும் ஏன் எதிர்க்கவில்லை…? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி…
இந்தி எதிர்க்கும் நீங்கள், உருது திணிப்பை மட்டும் ஏன் ஆதரிக்கின்றது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். “நாளை முதல் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கின்றோம். இடைத்தேர்தல் என்றாலே அதில் ஆளுங்கட்சியின் அத்துமீறல் அதிகமாக இருக்கும். அதை கண்கூடாக பார்க்க முடிகின்றது.
இலவசங்கள் இப்போது வெளியில் வர தொடங்கி இருக்கின்றது. பறக்கும் படையினர் நேற்று முன்தினம் வேட்டி சேலைகளை பிடித்து இருக்கிறார்கள். நீட் தேர்வை பொறுத்தவரை நடிகர் விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்கின்ற வகையில் அவரின் கருத்தை தெரிவித்து இருக்கின்றார். யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். எங்கள் கூட்டணியில் இருக்கும் பாமக கட்சியினரும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
கருத்து என்பது சுதந்திரம். ஆனால் நீட்டுக்கான ஆதரவு இன்னும் வலுவாக இருந்து வருகின்றது. திமுக சார்ந்த கொள்கை உடன் விஜய் பேசியிருப்பது பாஜகவின் கட்சிக்கு இன்னும் வளர்ச்சியை கொடுக்கும். இரு மொழிக் கொள்கை மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு என்று பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், பாஜக மட்டும் மும்மொழி கொள்கை மற்றும் நீட் தேர்வு என்பதில் உறுதியாக இருக்கின்றது.
மூன்று மொழிகளை மக்கள் ஏற்க விரும்புகிறார்கள். இந்தி மொழி கட்டாயம் என்பது கல்விக் கொள்கை. அதை திமுக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் தற்போது அதிகம் உருது பள்ளிகளை திறக்க வேண்டும் என்று மாநில அரசின் கல்விக் கொள்கை கூறுகின்றது. இந்தி திணிப்பை எதற்கும் நீங்கள் உருது திணிப்பை மட்டும் ஆதரிக்கிறீர்கள். மீனவர்களின் குழந்தைகளுக்கு கடல் சார்ந்த கல்வி கற்றுத் தரப்படும் என்று கூறுவது குலக்கல்வி இல்லையா?
மேலும் விக்கிரவாண்டி தேர்தலில் A-டீமான திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக B-டீம் அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கிறார்கள். அண்ணாமலை வெளியே போய்விட்டால் அதிமுக இழந்த இடத்தை பிடித்து விடலாம் என்று பகல் கனவு காணுகிறார்கள். அண்ணாமலை இல்லாவிட்டாலும் வேறு யாராவது பாஜகவை வளர்ப்பார்கள்” என்று செய்தியாளர் சந்திப்பில் பேசி இருந்தார்.