Connect with us

Cricket

கடின உழைப்பால் ஜெயித்துள்ளீர்கள்.. இதுதான் சரி – மோடியின் செயல் வைரல்

Published

on

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்களில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து இந்திய அணியினர் தங்கியிருந்த பார்படோஸில் புயல் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த வகையில் இந்திய வீரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானம் இன்று காலை நாடு திரும்பியது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையம் வந்தடைந்த இந்திய வீரர்களை வரவேற்க ரசிகர்கள் அதிகாலை 3 மணியில் இருந்தே விமான நிலையம் வரத்துவங்கினர். காலை 6 மணி அளவில் விமானம் வந்தடைந்த இந்திய அணி வீரர்கள் சுமார் 7 மணி அளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். அங்கிருந்து ஐடிசி மவுரியா ஓட்டலுக்கு சென்றனர். அங்கு இந்திய வீரர்களுக்கு மேளதாளங்களுடன் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஓட்டலில் இருந்து இந்திய வீரர்கள் வெற்றிக் கோப்பையுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உலகக் கோப்பையை வழங்கினர். வீரர்களை நேரில் பாராட்டிய பிரதமர் மோடி அவர்களுக்கு காலை உணவை விருந்தளித்து உபசரித்தார். பிறகு, வீரர்களுடன் உரையாற்றிய மோடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இவ்வாறு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வைரல் புகைப்படத்தில் பிரதமர் மோடி டி20 உலகக் கோப்பையில் கையை வைக்காமல், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கைகளை பிடித்து இருப்பது தெரியவந்துள்ளது. உலகக் கோப்பையுடன் தன்னை சந்திக்க வந்துள்ள வீரர்களை பாராட்டிய பிரதமர் மோடி, கோப்பையை கையில் ஏந்தாமல் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் கைகளை பிடித்துக் கொண்டிருப்பதை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

google news