tech news
உலகில் த்ரெட்ஸ் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இந்தியர்கள்
மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக செயலி த்ரெட்ஸ் (Threads). இந்த சேவை வெளியாகி முதலாம் ஆண்டு நிறைவுபெற உள்ளது. எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்திற்கு போட்டியாக கடந்த ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி த்ரெட்ஸ் துவங்கப்பட்டது. த்ரெட்ஸ் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவுபெறுவதை ஒட்டி மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதன் வளர்ச்சி குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், த்ரெட்ஸ் சேவையை உலகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் 175 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். எனினும், ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை சதவீதம் பேர் த்ரெட்ஸ் பயன்படுத்துகின்றனர் என்பது பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. த்ரெட்ஸ் தளத்தில் தற்போது 50 மில்லியனுக்கும் அதிக டாபிக் டேக் (Topic Tags) உள்ளன.
இதில் திரைப்படங்கள், தொலைகாட்சி, ஓடிடி மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்தவை அதிகம் இடம்பெற்றுள்ளன. இத்துடன் பிரபலங்கள் தொடர்பான உரையாடல்கள் அதிக கவனம் பெற்று இருக்கிறது. மற்ற நாட்டு பயனர்களுடன் ஒப்பிடும் போது, இந்தியர்கள் மற்றவர் பதிவுகள், வீடியோக்களில் தங்களது நண்பர்களை அதிகளவில் டேக் செய்கின்றனர்.
த்ரெட்ஸ் செயலியில் தேசிய, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல், டி20 உலகக் கோப்பை, மகளிர் பிரீமியர் லீக் உள்ளிட்டவை குறித்து அதிகம் விவாதிகப்பட்டுள்ளன. இந்தியாவை சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர்கள் த்ரெட்ஸ் செயலியில் அதிக ஆர்வும் காட்டி வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது.