Cricket
அப்போ எல்லாரும் என்ன திட்டினாங்க.. மோடியிடம் மனம்திறந்த ஹர்திக் பாண்டியா
டி20 உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கோப்பையை வென்று வந்த வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, அவர்களுடன் புகைப்படம், வீடியோக்களை எடுத்துக் கொண்டார்.
பிரதமர் மோடி வீரர்களுடன் உரையாடிய வீடியோக்கள் தாமதமாகவே வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வெளியான வீடியோ ஒன்றில் ஹர்திக் பாண்டியா பிரதமர் மோடியிடம் பேசிய விவரங்கள் இடம்பெற்று உள்ளது. அதில், ஹர்திக் பாண்டியா பிரதமர் மோடியிடம் கடந்த ஆறு மாதங்களில் தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியதாக தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், கடந்த ஆறு மாதங்களில் என் வாழ்க்கை அதிக பொழுதுபோக்கு நிறைந்த ஒன்றாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் நிறைய வெற்றிகள், தோல்விகளை சந்தித்தேன். மக்கள் என்னை திட்டித்தீர்த்தார்கள். நிறைய விஷயங்கள் அரங்கேறிவிட்டன. ஆனால், அவை அனைத்திற்கும் விளையாட்டின் மூலம் தான் பதில் அளிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதற்காக அதிகம் உழைத்துக் கொண்டும், மிகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று நம்பினேன், என்றார்.
பிரதமர் மோடியை சந்தித்த இந்திய வீரர்கள் அதன்பிறகு டெல்லியில் நடைபெற்ற நகர்வலத்தில் கலந்து கொண்டனர். மெரைன் டிரைவில் திறந்தவெளி வாகனத்தில் உலகக் கோப்பையுடன் வலம்வந்த இந்திய வீரர்கள் அங்கிருந்து வான்கடே சென்றனர். வான்கடே மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதை முடித்துக் கொண்ட பிறகு ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
அந்த பதிவில், இந்தியா, நீங்கள் தான் எனக்கு உலகம். என் ஆழ்மனதில் இருந்து உங்கள் அன்பிற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணங்களை நான் எப்போதும் மறக்கவே மாட்டேன். மழையை கூட பொருட்படுத்தாமல், எங்களுடன் கொண்டாட வந்தமைக்கு நன்றி. நாங்கள் உங்களை விரும்புகிறோம், என்று குறிப்பிட்டு இருந்தார்.