tech news
பயனர் விவரம் லீக் ஆனதா? ஏர்டெல் விளக்கம்
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர் விவரங்கள் திருடப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் படி பயனர் விவரங்கள் திருடப்பட்டது குறித்து எங்களுக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
மேலும், இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு ஏர்டெல் மதிப்புகளை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது. முன்னதாக வெளியான தகவல்களின் படி ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வரும் சுமார் 375 மில்லியன் பேரின் தகவல்கள் திருடப்பட்டு, டார்க் வெப் எனப்படும் தளத்தில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஏர்டெல் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏர்டெல் பயனர் விவரங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏர்டெல் மதிப்புகளை கெடுப்பதற்காகவே இதுபோன்ற தகவல்கள் பரப்பப்பட்டது. இது குறித்து நாங்கள் முழுமையான ஆய்வு நடத்தியுள்ளோம். ஏர்டெல் சிஸ்டம்களில் எவ்வித தகவல்களும் திருடுபோகவில்லை, என்று தெரிவித்துள்ளது.
பயனர் விவரங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் சென்சென் என்பவர், ஏர்டெல் சேவையை பயன்படுத்தும் 375 மில்லியன் பேரின் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் உள்ளதாக குறிப்பிட்டு அதில் போன் நம்பர், மின்னஞ்சல் முகவரி, ஆதார் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இந்த தகவல்களை விற்காமல் இருக்க 50 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 41 லட்சத்து 74 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஹேக்கர் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார். எனினும், இதனை உறுதிப்படுத்தும் வகையில், மற்ற பதிவுகள், ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் சாம்பில் டேட்டா என எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.