latest news
ஜெர்மனி தற்காலிக வீடு முதல் குதிரைக்கு சிறப்பு உணவு வரை… இந்திய அணியின் ஒலிம்பிக் பிளான்!
பாரிஸ் ஒலிம்பிக் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கும் நிலையில், இதற்காகக் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களைத் தயார்படுத்துவதற்கென பிரத்யேகமாக மிஷன் ஒலிம்பிக் செல் என்ற கமிட்டி உருவாக்கப்பட்டது. இந்த கமிட்டி வீரர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, பயிற்சி முதல் உபகரணங்கள் என பல்வேறு வகைகளிலும் அவர்களுக்குக் கடந்த மூன்றாண்டுகளாக உதவி செய்துவருகிறது. இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழின் ஆர்டிஐ கேள்வி மூலம் பல்வேறு விதமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடைபெற்ற மிஷன் ஒலிம்பிக் செல் கமிட்டியின் கூட்டங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்ட தகவல்கள் பற்றி தெரியவந்திருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்காக ஜெர்மனி, ஜப்பான் தொடங்கி பல்வேறு வெளிநாடுகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை மிஷன் ஒலிம்பிக் செல் செய்துவருகிறது.
* இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கும் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஜெர்மனியின் தொழில் நகரமான சார்ப்ரூக்கனில் பயிற்சி எடுத்து வருகிறார். அவருக்கு 12 பேர் கொண்ட சிறப்புப் பயிற்சிக் குழு உதவி வருகிறது.
* டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவுக்கென ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்படும் சிறப்பு டேபிள் டென்னிஸ் டேபிள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.
* குதிரையேற்றத்தில் சாதிக்கக் காத்திருக்கும் அனுஷ் அகர்வாலாவின் குதிரைக்கென பிரத்யேக உணவும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது.
* பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு டிரெயினிங்கில் உதவ ஐபேட் மற்றும் அதிவேக கேமராக்கள் வாங்கப்பட்டிருக்கின்றன.
இப்படி ஒலிம்பிக்கில் சாதிக்கத் துடிக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.72 கோடி மதிப்பில் பல்வேறு விஷயங்களையும் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் மிஷன் ஒலிம்பிக் செல் மூலம் செய்திருக்கிறது. கடந்த 2023 மே முதல் 2024 மே வரையிலான ஓராண்டில் மட்டும் வீரர்கள், தங்களின் பயிற்சிகளுக்குத் தேவை என 403 வகையான கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். இதில், பாரிஸ் ஒலிம்பிக்குக்கு மட்டும் 100 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.