Connect with us

latest news

4,500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்ல… இதுதான் உங்க சாதனையா…? ராமதாஸ் ஆவேசம்…!

Published

on

4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை, இதுதான் திமுக அரசின் சாதனையா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “தமிழகத்தில் 2994 தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகிய மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கின்றது.

அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் இன்னும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது என்பது கண்டிக்கத்தக்கது. தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலான நேரங்களை தலைமை ஆசிரியர் பணிக்காக கழிப்பதால் அவர்களால் பாடங்களை சரியாக நடத்த முடியவில்லை.

இதனால் மாணவ மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம். கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாகவே இதையெல்லாம் செய்து முடித்திருக்க வேண்டும். அப்போதுதான் காலியாக உள்ள பிற ஆசிரியர்கள் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அவற்றை நிரப்ப முடியும். அரசு பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

இப்படி இருக்கும் சூழலில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நியமிக்கப்படாததாலும் இருக்கும் குறைந்து எண்ணிக்கையிலான ஆசிரியர்களையும் நிர்வாகப் பணிக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணி என்பது மிகுந்த அளவு பாதிக்கப்படுகின்றது. அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வியை சீரழித்து வருகின்றது. இந்த நிலையை மாற்றி காலியாக உள்ள அனைத்து தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

google news