Cricket
2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் – கஷ்டம் தான் என்கிறார் முன்னாள் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். கடைசியாக 2017 பிப்ரவரி வாக்கில் இந்திய அணிக்காக களமிறங்கிய அமித் மிஸ்ரா சமீபத்திய பேட்டியில் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவு தான் என்று தெரிவித்தார். டி20 போட்டிகளில் மூத்த வீரர்களை விட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது அவசியம் என்று விராட் கோலி தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அமித் மிஸ்ரா, “அடுத்த உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. அப்போது அவரின் வயது 34 ஆக இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் ஏராளமான இளம் வீரர்கள் உள்ளனர். டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது விராட் கோலியின் யோசனையாக இருந்தது.”
“வரும் காலங்களில் அசாத்தியாக விளையாடும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. தற்போது அணியில் இருப்பதை காட்டிலும், அடுத்த உலகக் கோப்பை தொடர் வரை அவர் அதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வாய்ப்புகள் கடினமாகும் சூழல் உருவாகிடும். இஷான் கிஷன், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் என பல இளம் வீரர்கள் உள்ளனர்.”
“இளம் வீரர்களின் குறிக்கோள் டி20 போட்டிகளில் விளையாடுவதாகவே இருக்கிறது. எனினும், டி20 கிரிக்கெட்டில் போட்டியை வெற்றி பெற செய்வது பெரும்பாலும் மூத்த வீரர்கள் தான். டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற அனுபவம் மிகவும் அவசியம்,” என்று அவர் தெரிவித்தார்.