Connect with us

Cricket

பாகிஸ்தானை பந்தாடியது.. மகளிர் ஆசிய கோப்பையை வெற்றியோடு தொடங்கிய இந்தியா

Published

on

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் துவங்கியுள்ளன. தொடரின் அனைத்து போட்டிகளும் இலங்கையின் தம்புலாவில் நடைபெறுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா 6 போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒருமுறை வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகள் மோதியதில் இந்தியா 12 வெற்றிகளும், பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தாக அறிவித்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணிக்கு துவக்கம் கொடுத்த குல் பெரோசா மற்றும் முனீபா அலி முறையே 5 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து வந்த சித்ரா அர்மின் பொறுமையாக ஆடி 25 ரன்களை சேர்த்தார். இவர் ரேனுகா சிங் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் ஆடிய அலியா ரியாஸ் மற்றும் கேப்டன் நிதா தர் முறையே 6 மற்றும் 8 ரன்களில் பெவிலியன் திரும்பினர். இடையில் துபா ஹசன் 22 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இரம் ஜாவெத் வந்த வேகத்தில் திரும்பினார்.

இவர்களை தொடர்ந்து வந்தவர்களில் பாதிமா சானா மட்டும் இறுதிவரை களத்தில் இருந்து 22 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த சயிதா அரூப் ஷா 2 ரன்னிலும், நஷ்ரா சந்து மற்றும் சதியா இக்பால் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதனால் பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 108 ரன்களை மட்டும் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங், பூஜா வஸ்த்ராக்கர் மற்றும் ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

109 எனும் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் கொடுத்த ஷஃபாலி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி முறையே 40 மற்றும் 45 ரன்களை விளாசியது. இதனால் போட்டி கிட்டத்தட்ட இந்திய அணிக்கு சாதகமாக மாறியது. அடுத்து வந்த தயாலன் ஹேமலதா 14 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலா 5 மற்றும் 3 ரன்களை அடிக்க, இந்திய அணி 14.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 109 ரன்களை குவித்தது. இதன் மூலம் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் தரப்பில் சயீதா அரூப் ஷா இரண்டு விக்கெட்டுகளையும், நஷ்ரா சந்து ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

google news