latest news
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… பெண் தாதா அஞ்சலையை போலீஸ் கைது செய்தது எப்படி?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர், கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால சுவாமி தெருவில் உள்ள தனது வீட்டருகே மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு 5 நாள் போலீஸ் காவலுக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்ட நிலையில், ரவுடி திருவேங்டம் என்கவுண்டரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர் விசாரணையில் அதிமுக முன்னாள் நிர்வாகி வழக்கறிஞர் மலர்க்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், பாஜகவில் வடசென்னை மேற்குமாவட்ட மகளிரணி துணைத்தலைவராக இருந்த பெண் தாதா அஞ்சலை மூலமாகத்தான் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணம் கைமாறியதாக போலீஸார் சந்தேகித்தனர். அவரைக் கைது செய்ய போலீஸார் முயற்சித்த நிலையில், தலைமறைவானார்.
தலைமறைவான அஞ்சலையைக் கைது செய்ய தனிப்படை போலீஸார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். இந்தநிலையில், ஓட்டேரியில் அஞ்சலை பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, தனிப்படை போலீஸார் அங்கு விரைந்தனர். அங்கு ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த அஞ்சலையை போலீஸ் கைது செய்தது.