Cricket
மகளிர் ஆசிய கோப்பை: UAE-யை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இலங்கையில் நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 78 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகள் ஷஃபாளி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா முறையே 37 மற்றும் 13 ரன்களை அடித்தனர். அடுத்து வந்த தயாளன் ஹேமலதா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அதிரடியாக ஆடினார்.
47 பந்துகளை எதிர்கொண்ட ஹர்மன்பிரீத் கௌர் ஏழு பவுண்டரிகள், ஒரு சிக்சரை விளாசி 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 64 ரன்களை விளாசினார். போட்டி முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.
ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் கவிஷா எகோடேஜ் இரண்டு விக்கெட்டுகளையும், சமைரா தர்னிதர்கா மற்றும் ஹீனா ஹாட்சாந்தனி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு கேப்டன் இஷா ஓசா நல்ல துவக்கம் கொடுத்தார். இவர் 38 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய தீர்த்தா சதிஷ், ரினிதா ரஜித் மற்றும் சமைரா தர்னிதர்கா முறையே 4, 7 மற்றும் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கவிஷா எகோடேஜ் சிறப்பாக ஆடினார். இவர் 32 பந்துகளில் 40 ரன்களை குவித்தார்.
போட்டி முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பெற்ற இரண்டாவது வெற்றி இது ஆகும்.