tech news
தமிழகத்தில் iPad உற்பத்தி.. பக்கா ஸ்கெட்ச் போடும் பாக்ஸ்கான்
ஆப்பிள் சாதனங்களை உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் இந்தியாவில் தனது பணிகளை விரிவுப்படுத்த திட்டமிட்டு வருகிறது. தாய்வானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் ஐபேட் மாடல்களை அசெம்பில் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வரை ஆப்பிள் நிறுவன ஒப்பந்ததாரர்கள் இந்தியாவில் ஐபோன் மாடல்களை மட்டுமே உற்பத்தி செய்து வருகின்றன.
சமீபத்திய ஐபோன் 15 மாடல் சென்னையில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்படு வருகிறது. சென்னையை சுற்றியுள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில், பாக்ஸ்கான் நிறுவனம் ஐபேட் மாடல்களை அசெம்பில் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக தமிழக அரசுடன் பாக்ஸ்கான் பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைக்கு அனுபவம் நல்ல முறையில்தான் உள்ளது. அவர்கள் தற்போது முழுவீச்சில் களமிறங்க ஆயத்தமாகி உள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் ஐபோன், ஐபேட் மற்றும் மேலும் சில சாதனங்கள் என தற்போது இருப்பதை விட இருமடங்கு அதிகமாக உற்பத்தி செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஸ்மார்ட்போன் அசெம்ப்லிக்கு தேவையான வசதிகளே போதுமானது என்பதால், ஆப்பிள் ஃபிளாக்ஷிப் டேப்லெட் மாடல்களின் உற்பத்தி இந்தியாவிலும் சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய வேண்டி இருக்கும் என்பதால், ஆப்பிள் மேக்புக் மாடல்களின் உற்பத்திக்கு மட்டும் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் முதலீடுகளை அதிகப்படுத்தும் போது, பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தி சார்ந்த சிறப்பு சலுகைகளை பெற முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.