Cricket
கம்பீர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: சூர்யகுமார் யாதவ்
இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ், தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இன்று தங்களது முதல் போட்டியை களம் காண்கின்றனர்.
இதனிடையே பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் தனக்குள்ள பந்தம் குறித்து போட்டிக்கு முன்பு பேசினார். அப்போது, “நான் கேப்டனாக இல்லாத சமயத்திலும், களத்தில் தலைவராக இருப்பதை நான் எப்போதும் கொண்டாடி இருக்கிறேன். பல்வேறு கேப்டன்களிடம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அது மிகவும் அருமையான உணர்வு மற்றும் சிறந்த பொறுப்புணர்வு ஆகும்.”
“கவும் கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2014 ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறேன். அங்கிருந்து தான் எனக்கான வாய்ப்புகள் கிடைத்தன என்பதால், எனக்கு இது மிகவும் விசேஷமான ஒன்று. இந்த உறவு இப்போதும் உறுதியாகவே இருக்கிறது. நான் எப்படி பணியாற்றுவேன், பயிற்சி செஷன்களில் எனது மனநிலை எப்படி இருக்கும் என்பதை கம்பீர் நன்கு அறிவார்.”
“பயிற்சியாளராக அவர் எப்படி பணியாற்ற விரும்புவார் என்பதும் எனக்கு நன்றாக தெரியும். இந்த அற்புதமான உறவு அடுத்து எப்படி செல்லவிருக்கிறது என்பதை பார்ப்பதில் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.