automobile
மானியம் பெற ஏமாற்றுவீங்களா? 7 நிறுவனங்களை தட்டித்தூக்கி ரூ. 500 கோடி வசூலிக்க அரசு நடவடிக்கை!
மத்திய அரசு ஃபேம் 2 திட்டத்திற்கான விதிமுறைகளை முன்பை விட தற்போது சற்றே கட்டுப்படுத்தி இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகன உறப்த்தியாளர்கள் அரசுக்கு பொய் தகவல்களை வழங்கி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், குற்றச்சாட்டு குறித்து அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் ஏழு நிறுவனங்கள் தவறான தகவல்களை கொடுத்து மானியம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ. 500 கோடி மதிப்பிலான மானியத்தை மீட்க அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை முவுமையாக ரத்து செய்யவும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்போதைய குற்றச்சாட்டை தொடர்ந்து ஹீரோ எலெக்ட்ரிக், ஒகினவா ஆட்டோடெக், ஆம்பியர் EV, ரெவோல்ட் மோட்டார்ஸ், பென்லிங் இந்தியா, லொஹியா ஆட்டோ மற்றும் AMO மொபிலிட்டி போன்ற நிறுவனங்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள் தவறான தகவல்களை கொடுத்து ஃபேம் 2 திட்ட பலன்களை பெற்றதாக தெரிகிறது. ஃபேம் 2 திட்டத்தில் பயன்பெற எலெக்ட்ரிக் நிறுவனங்கள் தவறான தகவல்களை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போதைய நடவடிக்கையை மத்திய தொழில்துறை அமைச்சகம் சார்பில் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டு, பிரத்யேகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக இதுவரை சுமார் ரூ. 1400-இல் இருந்து ரூ. 1500 கோடி வரையிலான தொகை மானியமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர மானிய தொகைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வவருகின்றன. எலெர்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மானியம் பெற அரசாங்கத்திற்கு 10 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 4 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.
இந்தியாவில் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பலன்களை குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு சமீபத்தில் தான் மேற்கொண்டது. புதிய விதிகளின் கீழ் ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரிக்கான மானிய தொகை ரூ. 10 ஆயிரமாக குறைக்கப்பட்டது. மேலும் எலெக்ட்ரிக் வாகனத்தின் ஒட்டுமொத்த மதிப்பில் 15 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கை காரணமாக ஒலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனர்ஜி, டிவிஎஸ் மற்றும் விடா போன்ற பிராண்டுகள் தங்களது எலெக்ட்ரிக் வாகனங்கள் விலையை கணிசமாக அதிகரித்தன.