automobile
முதலில் எலெக்ட்ரிக் கார்.. அப்புறம் 5 புது எஸ்.யு.வி.க்கள்.. ஹோண்டாவின் சூப்பர் பிளான்!
ஹோண்டா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் தனது எலிவேட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில், எலிவேட் எஸ்.யு.வி.-யின் எலெக்ட்ரிக் வெர்ஷன் பற்றிய தகவல்களை ஹோண்டா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
2030 ஆண்டிற்குள் ஐந்து புதிய எஸ்.யு.வி.-க்களை அறிமுகம் செய்யும் ஹோண்டா நிறுவன திட்டத்தின் அங்கமாகவும், முதல் மாடலாகவும் எலிவேட் எஸ்.யு.வி. அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ஹோண்டா எலிவேட் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. வினியோகம் பண்டிகை கால வாக்கில் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
“இந்திய சந்தைக்காக மிகவும் வலிமை மிக்க வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். 2030 வாக்கில் ஐந்து எஸ்.யு.வி. மாடல்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். எலிவேட் மாடலுக்கு இந்தியா முன்னணி சந்தையாகவும், எதிர்காலத்தில் ஏற்றுமதி களமாகவும் இருக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் எலிவேட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய ஹோண்டா கார்ஸ் இந்தியா திட்டமிட்டு வருகிறது,” என ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டகுயா சுமுரா தெரிவித்து இருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்யப் போவதாக ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இதில் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களும் அடங்கும். இந்தியாவில் ஹோண்டா பிராண்டை மீண்டும் பலப்படுத்த, பிரீமியம் மாடல்களை இந்தியாவுக்கு சிபியு (முழுமையாக உருவாக்கப்பட்ட நிலை) மற்றும் சி.கே.டி. (காரின் பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பில் செய்வது) உள்ளிட்ட வழிகளில் கொண்டுவர திட்டமிட்டு வருகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 40 சதவீதத்திற்கும் அதிக பங்குகளை எஸ்.யு.வி. மாடல்கள் ஆக்கிரமித்து இருக்கும் நிலையில், ஹோண்டா நிறுவனம் எண்ட்ரி லெவல் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹோண்டா எலிவேட் மாடல் இந்திய சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல்கள் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஹோண்டா எலிவேட் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
புதிய ஹோண்டா எலிவேட் மற்றும் எதிர்கால மாடல்களை உற்பத்தி செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தின் தபகுரா ஆலையில் உற்பத்தி பணிகளை வேகப்படுத்தி வருகிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு நாளும் 540 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 660 ஆக அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.