automobile
மே 2023: இந்திய காம்பேக்ட் எஸ்.யு.வி. விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய கிரெட்டா
ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தான் எலிவேட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எலிவேட் மாடல் மூலம் ஹோண்டா நிறுவனம் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் களமிறங்கி இருப்பதோடு, இந்த பிரிவில் ஐக்கியமாக நம்பிக்கை வைத்துள்ளது. தற்போது வரை இந்த பிரிவின் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா மாடலை கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கடந்த மே மாதத்தில் மட்டும் இந்திய சந்தையில் கிரெட்டா காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் 14 ஆயிரத்து 449 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் இந்திய காம்பேக்ட் எஸ்.யு.வி.-க்கள் சந்தையில் கிரெட்டா மாடல் 42 சதவீத பங்குகளை பெற்றுள்ளது. இதே எண்ணிக்கை ஏப்ரல் 2023 மாதத்தில் 39.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கந்த ஆண்டு மே மாதத்தில் கிரெட்டா மாடல் 10 ஆயிரத்து 973 யூனிட்களும், ஏப்ரல் மாதம் 14 ஆயிரத்து 186 யூனிட்களும் விற்பனையாகி இருந்தது. அந்த வகையில் வருடாந்திர அடிப்படையில் கிரெட்டா மாடல் 31.68 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மாதாந்திர அடிப்படையில் இது 1.85 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்த பிரிவில் மற்றொரு போட்டி நிறுவனமான மாருதி சுசுகி தனது கிரான்ட் விட்டாரா மூலம் கியா செல்டோஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. கடந்த மாதம் மாருதி சுசுகி நிறுவனம் 8 ஆயிரத்து 877 கிரான்ட் விட்டாரா யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதன் மூலம் மாதாந்திர விற்பனை 14.66 சதவீதம் வளர்ச்சியைபதிவு செய்தது.
விரைவில் பேஸ்லிஃப்ட் செய்யப்பட இருக்கும் கியா செல்டோஸ் மாடல் கடந்த மாதம் 4 ஆயிரத்து 065 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்த மாடலின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கியா செல்டோஸ் மாடல் வருடாந்திர அடிப்படையில் 1888 யூனிட்களும், மாதாந்திர அடிப்படையில் 3 ஆயிரத்து 148 யூனிட்களும் சரிவடைந்துள்ளது.
மே மாத விற்பனையில் டொயோட்டா ஹைரைடர் மாடல் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த மாடல் 3 ஆயரத்து 090 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் இந்த மாடல் 18.12 சதவீதம் மாதாந்திர வளர்ச்சியும், வருடாந்திர அடிப்படையில் 474 யூனிட்களும் அதிகரித்துள்ளது.
ஸ்கோடா குஷக் மாடல் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மாடலை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. குஷக் மாடல் கடந்த மாதம் 1,685 யூனிட்கள் விற்பனையான நிலையில், டைகுன் மாடல் 1484 மாடல்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் குஷக் மாடல் 6.70 சதவீத வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டைகுன் மாடல் 17.03 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
எம்ஜி ஆஸ்டர் மாடல் கடந்த மாதம் 592 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இது வருடாந்திர அடிப்படையில் 70.72 சதவீதம் குறைவு ஆகும். மாதாந்திர அடிப்படையில் இது 15.91 சதவீதம் குறைவு ஆகும்.