automobile
ஆப்பிளை ஓரம்கட்ட சூப்பர் ஐடியா.. மிக குறைந்த விலையில் ஜியோடேக் அறிமுகம்!
ஆப்பிள் நிறுவனத்தின் ப்ளூடூத் டிராக்கர் சாதனம் தான் ஏர்டேக். உலகம் முழுக்க மிக பிரபலமான ப்ளூடூத் டிராக்கர் சாதனமாக ஏர்டேக் அறியப்படுகிறது. எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற சாதனங்கள் போன்றே ஏர்டேக் விலையும் சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதை மனதில் வைத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சொந்த ப்ளூடூத் டிராக்கர் சாதனத்தை ஜியோடேக் (JioTag) எனும் பெயரில் அறிமுகம் செய்தது.
மிக குறைந்த விலை, குறைந்த எடை, எளிய பயன்பாடு என ஏராளமான நன்மைகள் கொண்ட ஜியோடேக் ஆப்பிள் ஏர்டேக் சாதனத்திற்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஜியோடேக் சாதனம் ஜியோ கம்யுனிட்டி ஃபைண்ட் எனும் அம்சம் கொண்டிருக்கிறது. ஜியோடேக் மாடலில் எளிதில் கழற்றி மாற்றக்கூடிய CR2032 ரக பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு ஆண்டு வரையிலான பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
இது பயனரின் ஸ்மார்ட்போன்களில் ப்ளூடூத் வெர்ஷன் 5.1 மூலம் கனெக்ட் ஆகிக் கொள்ளும். பயனர்கள் இதனை தங்களது வாலெட், கைப்பை மற்றும் இதர மிக முக்கிய பொருட்களில் வைத்துக் கொள்ளலாம். இதனுடன் வழங்கப்படும் லேன்யார்டு கேபிள் (lanyard cable) கொண்டு ஜியோடேக் சாதனத்தை எளிதில் மற்ற பொருட்களுடன் இணைத்துக் கொள்ள உதவுகிறது.
புதிய ப்ளூடூத் டிராக்கர் சாதனத்துடன் ஜியோ கம்யுனிட்டி ஃபைண்ட் (Jio Community Find) அம்சத்திற்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது. அந்த வகையில், பயனர்கள் இந்த அம்சம் கொண்டு இணைக்கப்பட்ட பொருட்கள் கடைசியாக துண்டிக்கப்பட்ட லொகேஷனை கண்டறிய செய்கிறது. இத்துடன் பயனர்கள் தங்களின் ஜியோடேக் சாதனத்தை ஸ்மார்ட்போன்களுக்கான ஜியோதிங்ஸ் செயலியில் பட்டியலிட்டு, கம்யுனிட்டி ஃபைண்ட் அம்சம் மூலம் தொலைந்து போன ஜியோடேக் கடைசியாக இருந்த லொகேஷனை அறிந்து கொள்ள முடியும்.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இந்திய சந்தையில் ஜியோடேக் விலை ரூ. 2 ஆயிரத்து 199 என்று பட்டியலிடப்பட்டு உள்ளது. எனினும், இந்த சாதனம் ரூ. 749 விலையில் கிடைக்கிறது. நாட்டின் தேர்வு செய்யப்பட்ட அஞ்சல் குறியீட்டு பகுதிகளுக்கு கேஷ் ஆன் டெலிவரி வசதி வழங்கப்படுகிறது. வெள்ளை நிறத்தில் கிடைக்கும் ஜியோடேக் சாதனம் கூடுதல் பேட்டரி மற்றும் லேன்யார்டு கேபிள் உடன் வழங்கப்படுகிறது.