automobile
எல்லாமே வித்துடிச்சி பாஸ்.. லம்போர்கினியின் வெறித்தனமான அப்டேட்.. அடுத்து என்ன?
லம்போர்கினி நிறுவனத்தின் பியுர் கம்பஷன் என்ஜின் கொண்ட மாடல்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்ததாக தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஹைப்ரிட் மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க லம்போர்கினி நிறுவனம் முடிவு செய்திருப்பதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஹூரகேன் மற்றும் உருஸ் மாடல்களுக்கான முன்பதிவுகள் முழுமை பெற்று விட்டன. இதன் மூலம் லம்போர்கினியின் பியுர் கம்பஷன் மாடலின் வாகன உற்பத்தி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது என்று லம்போர்கினி நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஸ்டீஃபன் வின்கில்மேன் தெரிவித்து இருக்கிறார்.
பெரும் முதலீடு :
2024 ஆண்டு, ஹைப்ரிட் மாடல்கள் பிரிவில் மட்டும் சுமார் 1.8 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய இருப்பதாக லம்போர்கினி் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிவித்து இருந்தது. இந்த திட்டத்தின் நீட்சியாக இந்த தசாப்தத்தின் இறுதியில் லம்போர்கினி நிறுவனத்தின் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் திறன் கொண்ட வாகனம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
2024 மற்றும் 2025 ஆண்டுகளில் கம்பஷன் என்ஜின் கொண்ட மாடல்களுக்கு மாற்றாக பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஹைப்ரிட் ரெவெல்டோ மாடல் 2025 இறுதியில் விற்றுத் தீர்ந்து விடும் என்று தான் எதிர்பார்ப்பதாக வின்கில்மேன் தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு விற்பனையில் அமோக வளர்ச்சி பதிவான நிலையில், இந்த ஆண்டும் இதே நிலை தொடரும் என்று அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
இந்திய விற்பனை விவரம் :
லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு மட்டும் 92 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதில் 60:40 வீதம் உருஸ் மற்றும் சூப்பர்கார் மாடல்கள் இடம்பெற்று இருந்தன. இதன் மூலம் லம்போர்கினி நிறுவனம் விற்பனையில் 33 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்தது. இது தவிர இந்திய சந்தையில் லம்போர்கினி நிறுவனம் 400 யூனிட்கள் மைல்கல்லை கடந்த ஆண்டு எட்டியது.
இந்திய சந்தையில் லம்போர்கினி மட்டுமின்றி மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்கள் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. டாப் என்ட் கார்களின் விற்பனை அதிகரிப்பது தற்போதைய டிரென்ட் ஆக இருக்கிறது.