automobile
இதுவரை இப்படி நடந்ததில்லை.. விற்பனையில் கெத்து காட்டிய மெர்சிடிஸ் பென்ஸ்!
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான விற்பனையில் 13 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் 8 ஆயிரத்து 528 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் வரலாற்றில், அந்நிறுவனம் ஆறு மாத காலத்தில் விற்பனை செய்த அதிகபட்ச யூனிட்கள் இது ஆகும்.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் 2023) மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வாகன முன்பதிவில் அசத்தியது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முன்பதிவில் 3 ஆயிரத்து 500-க்கும் அதிக யூனிட்களை பதிவு செய்து இருக்கிறது. பென்ஸ் வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள அதீத தட்டுப்பாடு காரணமாக இத்தகைய வரவேற்பு கிடைப்பதாக தெரிகிறது.
இரண்டாவது காலாண்டு விற்பனையில் 3 ஆயிரத்து 831 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன வரலாற்றில் முதல் முறை ஆகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது மெர்சிடிஸ் பென்ஸ் வாகன விற்பனை எட்டு சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
2023 முதல் அரையாண்டு வரையிலான விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன எலெக்ட்ரிக் வாகன விற்பனை பத்து மடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து EQB மற்றும் EQS போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது உள்ளிட்டவை, வாகன விற்பனை அதிகரிக்க காரணமாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ரூ. 1 கோடியே 50 லட்சத்திற்கும் அதிக விலை கொண்ட டாப் எண்ட் வாகன பிரிவு 50 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த பிரிவு வாகனங்கள் மட்டும் ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் ஆகும்.
இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் GLS, S-கிளாஸ், S-கிளாஸ் மேபேக், GLS மேபேக் மற்றும் AMG G63 போன்ற மாடல்களுக்கு அதிக வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இதுதவிர மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக LWB E-கிளாஸ் தொடர்ந்து நீடிக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எ,ஸ்.யு.வி. என்ற பெருமையை GLEபெற்று இருக்கிறது. முற்றிலும் புதிய C-கிளாஸ் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் கணிசமான எண்ணிக்கையை பெற்று அசத்தி உள்ளன.