automobile
ZS எலெக்ட்ரிக் காரில் இப்படியொரு வசதியா? எம்ஜி-க்கு தாராள மனசு தான்!
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ZS EV எஸ்.யு.வி.-இன் புதிய எக்ஸ்-க்ளுசிவ் ப்ரோ வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வெர்ஷனில் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ஃபுல் சூட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய எம்ஜி ZS EV மாடலின் விலை ரூ. 27 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய எக்ஸ்-க்ளூசிவ் ப்ரோ வெர்ஷனின் விலை ஸ்டான்டர்டு எக்ஸ்-க்ளுசிவ் வெர்ஷனை விட ரூ. 59 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும். அதிக விலைக்கு ஏற்ப புதிய வெர்ஷனில் பல்வேறு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய வெர்ஷனில், பெட்ரோல் என்ஜின் கொண்ட ஆஸ்டர் எஸ்.யு.வி.-க்கு இணையான அம்சங்கள் உள்ளன.
என்னென்ன மாற்றங்கள் :
இதுவரை எம்ஜி ZS EV மாடலில் பிலைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், லேன் சேன்ஜ் அசிஸ்ட், ரியர் கிராஸ்-டிராஃபிக் அலர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது புதிய வெர்ஷனில் டிராஃபிக் ஜாம் அசிஸ்ட், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங், ஆட்டோனோமஸ் எமர்ஜன்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபாச்சர் வார்னிங், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம்கள், அடாப்டிவ் குரூயிஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் அசிஸ்டிவ் சிஸ்டம்களின் சென்சிடிவிட்டியை மேனுவல் முறையில் செட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருப்பது தான். அதன்படி சென்சிடிவிட்டியை லோ, மீடியம் மற்றும் ஹை என மூன்று நிலைகளில் அட்ஜஸ்ட் செய்ய முடியும். இந்த சிஸ்டம் ஹேப்டிக், ஆடியோ மற்றும் விஷூவல் என மூன்று லெவல்களில் எச்சரிக்கை செய்யும்.
பாதுகாப்பு அம்சங்கள் :
இவைதவிர எம்ஜி ZS EV மாடலின் இதர அம்சங்களில் வெறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் மற்ற பாதுகாப்பு உபகரணங்களான ஆறு ஏர்பேக், இ.பி.டி. கொண்ட ஏ.பி.எஸ்., எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஹில் டிசென்ட் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜிங், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.
மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை :
எம்ஜி ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 461 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். அன்றாட பயன்பாடுகளின் போது, போக்குவரத்து நெரிசல் மற்றும் இதர விஷயங்கள் காரணமாக ரேன்ஜ்-இல் மாற்றங்கள் ஏற்படலாம்.
புதிய ZS EV வெர்ஷனிலும் முன்புற ஆக்சிலில் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 176 ஹெச்.பி. பவர் மற்றும் 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும்.
இதன் விலை ரூ. 23 லட்சத்து 38 ஆயிரம் என்று துவங்கி அதிகபட்சம் ரூ. 27 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் எம்ஜி ZS EV மாடல் பி.ஒய்.டி. அட்டோ 3 மற்றும் ஹூண்டாய் கோனா EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.