automobile
புதிய யமஹா RX வேற லெவல் என்ஜின் கொண்டிருக்கும் – வெளியான சூப்பர் தகவல்!
யமஹா நிறுவன தலைவர் ஈஷின் சிஹானா முற்றிலும் புதிய யமஹா RX மாடலில் சரியான டிசைன், செயல்திறன் மற்றும் ஒரிஜினல் RX100 போன்ற மிக குறைந்த எடை கொண்டிருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.
பட்ஜெட் ரக மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களில் இருந்து யமஹா நிறுவனம் சமீப காலங்களில் தன்னை ஒதுக்கி வைத்துக் கொண்டுள்ளது. மாறாக பிரீமியம் இருசக்கர வாகனங்கள் பிரிவில் யமஹா தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக யமஹா நிறுவனத்தின் யுத்தியாக இது இருந்து வருகிறது.
அதிக பிரபலமாக விளங்கிய RX100 :
ஆனால் கடந்த காலங்களில் யமஹா நிறுவனம் இந்திய கம்யுட்டர் பிரிவில் தனது புகழ்பெற்ற RX100 மாடல் மூலம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதில் வழங்கப்பட்டு இருந்த 2 ஸ்டிரோக் என்ஜின் வெளிப்படுத்திய சத்தம் இன்றும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இது மற்ற நிறுவன மாடல்களை விட தனித்துவம் மிக்கதாகவும் உள்ளது.
இந்த நிலையில், யமஹா நிறுவனம் தனது பழைய RX பிரான்டிங்கில் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி புதிய மாடலில் குறைந்தபட்சம் 200சிசி என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. யமஹா இந்தியா தலைவர் ஈஷின் சிஹானா RX100 பெயர் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்பதை ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.
என்ஜின் மற்றும் இதர விவரங்கள் :
ஆனால், இந்த மாடல் 2026 மற்றும் அதற்கும் முன்பாக அறிமுகம் செய்யப்படாது என்று அவர் ஏற்கனவே தெரிவித்து விட்டார். தற்போதுள்ள பிஎஸ்6 2 விதிகள் மற்றும் எதிர்கால விதிகள் 2 ஸ்டிரோக் என்ஜின் மீண்டும் வருவதற்கு அனுமதிக்காது. யமஹா RX100 மாடல் அதன் ஸ்டைலிங், குறைந்த எடை, செயல்திறன் மற்றும் சத்தத்திற்கு புகழ் பெற்றது என அவர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இவை அனைத்தையும் உள்ளடக்கிய வாகனம் தற்போது உருவாக்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 200சிசி திறனிலேயே உருவாக்க வேண்டும். ஆனால் 200சிசி என்ஜின் முந்தைய RX100 வெளிப்படுத்திய சத்தத்தை கொடுக்காது. RX100 பிரான்டிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதை யமஹா திட்டமிடவில்லை என்று யமஹா இந்தியா தலைவர் தெரிவித்து இருக்கிறார்.
மாறாக புதிய RX பிரான்டிங் கொண்ட மாடல் அதிக செயல்திறன் வழங்குவதோடு, குறைந்த எடை மற்றும் அதற்கு ஏற்ற வகையிலான ஸ்டைலிங் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் இதற்கு தற்போதைய 155சிசி என்ஜின் பொருத்தமான ஒன்றாக இருக்காது.