automobile
ஒலா எலெக்ட்ரிக் கார் எப்படி இருக்கும் தெரியுமா? இணையத்தில் வெளியான படங்கள்!
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அடுத்த ஆண்டு எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீடு தவிர ஒலா எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி இருக்கும் காப்புரிமை புகைப்படங்களில் ஒலா எலெக்ட்ரிக் கார் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.
தற்போது கான்செப்ட் வடிவில் இருக்கும் ஒலா எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே வெளியான டீசர்களுடன் ஒற்றுப் போகும் வகையிலேயே உள்ளது. எனினும், இதன் ப்ரோடக்ஷன் வெர்ஷன் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும் என்று தெரிகிறது. தற்போதைய புகைப்படங்களின் படி இந்த காரின் ஒட்டுமொத்த தோற்றம் டெஸ்லா மாடல் S மற்றும் மாடல் 3 போன்றே காட்சியளிக்கிறது.
இதன் பாடி பேனல்கள் வட்ட வடிவம் கொண்டிருப்பதோடு, ஏரோடைனமிக் திறனுக்கு ஏற்றவாரு உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் வீல்கள் வீல்பேஸ்-ஐ நீட்டிக்கும் வகையில், ஓரத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த டிசைன் காரணமாக காரில் அதிக திறன் கொண்ட பேட்டரியை வழங்க முடியும்.
வழக்கமான எலெக்ட்ரிக் வாகனங்களை போன்றே, இந்த எலெக்ட்ரிக் காரிலும் கிரில் வழங்கப்படவில்லை. மேலும் முன்புற பம்ப்பர் மென்மையாக்கப்பட்டு, முன்புறம் முழுக்க ஏராளமான ஏர் இன்டேக்குகள் வழங்கப்படுகின்றன. இதன் ஹெட்லேம்ப்கள் பம்ப்பரின் மேல்புறம் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவை மெல்லிய தோற்றம் கொண்டிருக்கின்றன. இத்துடன் எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் மற்றும் லைட் பார் வழங்கப்படுகின்றன.
இந்த காரின் ரூஃப் டூயல் டோன் எஃபெக்ட் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. முந்தைய டீசர்களில் இந்த எலெக்ட்ரிக் காரில் ஃபுல் கிலாஸ் ரூஃப் வழங்கப்படும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்து இருந்தது. ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்ட மற்ற டீசர்களில் புதிய எலெக்ட்ரிக் கார் ஹை-ரைடிங் கிராஸ்ஓவர் டிசைன் கொண்டிருந்தது. அந்த வகையில், ஒலா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் பாடி ஸ்டைலிங் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஒலா எலெக்ட்ரிக் காரின் தொழில்நுட்ப விவரங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த காரில் 70 கிலோவாட் ஹவர் முதல் 80 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது காரை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இதில் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் காரை மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4 நொடிகளுக்குள் எட்ட செய்யும் என்று தெரிகிறது. இத்துடன் டிரைவ் அசிஸ்ட் வசதிகள், கீலெஸ் மற்றும் ஹேன்டில்-லெஸ் டோர்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த காரில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மூவ் ஒஎஸ் மென்பொருள் வழங்கப்படுகிறது.
Photo Courtesy: AutoCarIndia