automobile
எலெக்ட்ரிக் 2-வீலர்களில் அசத்தலான புதிய தொழில்நுட்பம் – இனி ஹெல்மட் இல்லாம வண்டி நகராது
உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனங்கள் சந்தையாக இந்தியா விளங்குகிறது. எனினும், ரைடர் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்திய சாலைகளில் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது இன்றும், சர்வ சாதாரண காரியமாகவே நீடிக்கிறது. இந்த நிலையை மாற்றும் நோக்கில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிதாக ஹெல்மட் டிடெக்ஷன் சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது.
ஒலா நிறுவனத்தின் ஹெல்மட் டிடெக்ஷன் சிஸ்டம், கேமரா கொண்டு ரைடர் ஹெல்மட் அணிந்திருக்கிறாரா என்று கண்டறிகிறது. பிறகு அது பற்றிய தகவலை வெஹிகில் கண்ட்ரோல் யூனிட்டிற்கு அனுப்பி, இங்கிருந்து மோட்டார் கண்ட்ரோல் யூனிட்டிற்கு அனுப்பப்படும். இதைத் தொடர்ந்து வாகனம் ரைடு மோடிற்கு செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பது தீர்மானிக்கப்படும்.
வாகனம் ரைடு மோடில் இருக்கும் பட்சத்தில் சிஸ்டம், ரைடர் ஹெல்மட் அணியாமல் இருப்பதை பார்த்தால், உடனடியாக வாகனம் பார்க் மோடிற்கு சென்றுவிடும். பார்க் மோடில் இருக்கும் போது வாகனத்தின் டேஷ்போர்டிற்கு நோட்டிஃபிகேஷன் மூலம் ரைடர் ஹெல்மட் அணிய வேண்டும் என்று நினைவூட்டப்படும். பிறகு ரைடர் ஹெல்மட் அணிந்திருப்பதை உறுதிப்படுத்தி விட்டுத் தான் வாகனம் ரைடு மோடிற்கு செல்லும். இதைத் தொடர்ந்து ரைடர் ஹெல்மல் அணிந்திருப்பதை சிஸ்டம் டிராக் செய்து கொண்டே இருக்கும்.
டிவிஎஸ் நிறுவனமும் தனது வாகனங்களில் கேமரா சார்ந்து இயங்கும் ஹெல்மட் ரிமைன்டர் சிஸ்டம் வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து இருக்கிறது. எனினும், ஒலா நிறுவனத்தின் சிஸ்டம், ரைடர் ஹெல்மட் அணியாத பட்சத்தில் வாகனத்தை இயக்க விடாமல் செய்கிறது. டிவிஎஸ் உருவாக்கி வரும் தொழில்நுட்பம் ரைடருக்கு எச்சரிக்கை தகவலை மட்டுமே வழங்கும்.
தற்போது உருவாக்கப்பட்டு புதிய ஹெல்மட் டிடெக்ஷன் சிஸ்டம் எப்போது ஒலா நிறுவன வாகங்களில் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. சமீபத்தில் தான் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்கள் விற்பனையில், வேரியண்ட்களை அதிரடியாக மாற்றங்களை மேற்கொண்டது. இதுதவிர ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் கார் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒலா எலெக்ட்ரிக் கார் மாடலில் அதிகபட்சம் 80கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும் என்று தெரிகிறது.