automobile
டாடா டியாகோ, டிகோர் மாடல்களில் டுவின் CNG செட்டப் – இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் அல்ட்ரோஸ் iCNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 7 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 55 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் அல்ட்ரோஸ் CNG மாடலின் டாப் எண்ட் வேரியன்டில் சன்ரூஃப் உள்ளது.
இந்த காரில் CNG கிட் பூட் ஃப்ளோர் (boot floor) கீழே பொருத்தப்பட்டு இருக்கிறது. இதே போன்ற செட்டப் டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் மாடல்களிலும் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. வழக்கமாக வழங்கப்படும் ஒற்றை சிலிண்டருக்கு பதிலாக டாடா நிறுவனம் CNG டேன்க் அளவை பிரித்து இரண்டாக மாற்றி இருக்கிறது. மேலும் இவை காரின் பூட் ஃப்ளோர் அடியில் கச்சிதமாக பொருந்தும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
புதிய டிசைன் காரணமாக இந்த காரில் கிட்டத்தட்ட 210 லிட்டர்கள் அளவுக்கு பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. தற்போது அல்ட்ரோஸ் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கும் ALFA பிளாட்ஃபார்ம் இந்த செட்டப்-ஐ மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிரத்யேகமான டுவின் சிலிண்டர் CNG செட்டப் பயன்படுத்துவதற்காக காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருப்பது தெரியவந்துள்ளது.
விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டாடா பன்ச் iCNG மாடலில் இந்த செட்டப் வழங்கப்பட இருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இந்த கார் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதே போன்ற செட்டப் டாடா டியாகோ ஹேச்பேக் மற்றும் டிகோர் காம்பேக்ட் செடான் மாடல்களிலும் வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்த இரு மாடல்களும் சற்றே பழைய X90 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில், இந்த கார்களில் எப்படி டுவின் சிலிண்டர்கள் கொண்ட CNG கிட் வழங்கப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இவைதவிர டாடா நிறுவனம் தனது நெக்சான் மாடலையும் CNG வேரியண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. நெக்சான் மாடலில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட வேரியண்ட் நீண்ட காலத்திற்கு விற்பனை செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அப்போது டீசல் என்ஜினுக்கு மாற்றாக CNG கிட் கொண்ட மோட்டார் அறிமுகம் செய்யப்படலாம்.