automobile
டக்குனு ரெடியான டிவிஎஸ்.. விரைவில் புதிய இ ஸ்கூட்டர் அறிமுகம் செய்ய திட்டம்!
உலக சந்தையில் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக டிவிஎஸ் விளங்குகிறது. டிவிஎஸ் நிறுவனம் இந்த பட்டியலில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களையும் இணைத்துக் கொள்வதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக டிவிஎஸ் நிறுவனம் 2021 ஆண்டிலேயே சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து இருக்கிறது.
இந்த முதலீட்டுக்கான முடிவுகள் தற்போது வெளியாக துவங்கி உள்ளன. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எலெகட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஐகியூப் மாடல் இடம்பிடித்து இருக்கிறது. இந்த வரிசையில் டிவிஎஸ் நிறுவனம் மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
புதிய மாடல் வெளியீட்டுக்கான அழைப்புகளை, டிவிஎஸ் நிறுவனம் அனுப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அழைப்புகளில் புதிய வாகனம் பற்றிய தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், இது எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் வாய்ப்புகளையே உணர்த்துகிறது. இந்த வாகம் டிவிஎஸ் கிரியோனாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக 2018 ஆண்டு டிவிஎஸ் நிறுவனம் முதன் முதலில் கிரியோன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்-ஐ காட்சிப்படுத்தி இருந்தது. இந்த மாடல் வைல்டு டிசைன், மேக்சி ஸ்கூட்டர் போன்ற பாடி ஸ்டைல் கொண்டிருந்தது. இதன் வடிவமைப்பு மற்றும் தோற்றம் ஐரோப்பிய மாடலை போன்று காட்சியளித்தது. டிவிஎஸ் நிறுவனம் தனது வாகனங்களில் பயன்படுத்த ஏராளமான பெயர்களை டிரேட்மார்க் செய்து வைத்திருக்கிறது.
அதன்படி புதிய எலெக்ட்ரிக் வாகனம் எந்த பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. டிவிஎஸ் நிறுவனம் ரெட்ரான் மற்றும் ஜெப்பலின் போன்ற பெயர்களையும் டிரேட்மார்க் செய்து வைத்துள்ளது. இது டிவிஎஸ்-இன் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்- ஆக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு.
புதிய டிவிஎஸ் எலெக்ட்ரிக் வாகனம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் நாட்களில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.