automobile
480 கிமீ ரேன்ஜ்.. வால்வோவின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார்.. இவ்வளவு அம்சங்களா?
ஸ்வீடனை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான வால்வோ, முற்றிலும் புதிய EX30 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வால்வோ EX30 மாடல் கீலி சஸ்டெயின்பில் எக்ஸ்பீரியன்ஸ் ஆர்கிடெக்ச்சர் பிளாட்ஃபார்மில் (Geely Sustainable Experience Architecture Platform) உருவாகி இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் ஸ்மார்ட் #1 எஸ்.யு.வி. மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது.
முற்றிலும் புதிய EX30 மாடல் மிகச் சிறிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஆகும். அளவில் சிறிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. 4233mm நீளம், 2650mm நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த கார் ஃபிளாக்ஷிப் EX90 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-யை நினைவூட்டுகிறது. வால்வோ EX30 மாடலின் ஹெட்லைட்களில் ஏராளமான சதுரங்க வடிவம் கொண்ட பிக்சல்கள் உள்ளன.
காரின் பக்கவாட்டு பகுதியில் கூப் மாடல்களில் இருப்பதை போன்றே ஸ்லோபிங் ரூஃப், பிளாக் சைடு ஸ்கர்ட் மற்றும் அலாய் வீல்கள் உள்ளன. பின்புறத்தில் ரூஃப்-மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன. டெயில்கேட் பகுதியில் வால்வோ பெயர் ஸ்ப்லிட் ஸ்டைலில் இடம்பெற்று இருக்கிறது.
இண்டீரியரை பொருத்தவரை 12 இன்ச் சென்ட்ரல் டச்-ஸ்கிரீன் உள்ளது. இதையே இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே போன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மென்பொருள் கூகுளை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் கூகுள் மேப்ஸ் மற்றும் ஸ்பாடிஃபை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
வால்வோ EX90 மாடல்- சிங்கில் மோட்டார், சிங்கில் மோட்டார் எக்ஸ்டென்டட் ரேன்ஜ் மற்றும் டுவின் மோட்டார் பெர்ஃபார்மன்ஸ் என மூன்றுவிதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் சிங்கில் மோட்டார் வேரியண்டில் 51 கிலோவாட் ஹவர் LFP பேட்டரி பேக் உள்ளது. இது முழு சார்ஜ் செய்தால் 344 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் 150 கிலோவாட் ஹவர் சார்ஜிங் மூலம் 26 நிமிடங்களை காரை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.
சிங்கில் மோட்டார் வெர்ஷன் 268 ஹெச்பி பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்கிறது. இதன் எக்ஸ்டென்டட் ரேன்ஜ் மாடலில் 69 கிலோவாட் ஹவர் NMC பேட்டரி பேக் உள்ளது. இது முழு சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
இத்துடன் வழங்கப்படும் 175 கிலோவாட் ஹவர் சார்ஜிங் வசதி மூலம் காரை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 26 நிமிடங்களே ஆகும். இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.3 நொடிகளில் எட்டிவிடும். இதுவும் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர்கள் வேகத்திலேயே செல்கிறது. எக்ஸ்டென்டட் ரேன்ஜ் மற்றும் சிங்கில் மோட்டார் வேரியண்ட் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.3 நொடிகளில் எட்டிவிடும். இதுவும் மணிக்கு 180 கிலோமீட்டர்கள் வேகத்திலேயே செல்லும்.
டூயல் மோட்டார் வெர்ஷனிலும் எக்ஸ்டென்டட் ரேன்ஜ் மாடலில் உள்ளதை போன்ற பேட்டரி பேக் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 460 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இது ஆல் வீல் டிரைவ் வேரியண்ட் ஆகும். இதில் உள்ள இரட்டை மோட்டார் செட்டப் 422 ஹெச்பி பவர், 543 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த வேரியண்ட் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.6 நொடிகளிலேயே எட்டிவிடும்.