automobile
சியோமியின் முதல் எலெக்ட்ரிக் கார் – இணையத்தில் லீக் ஆன ஸ்பை படங்கள்!
சியோமி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. சியோமியின் முதல் எலெக்ட்ரிக் கார் MS11 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கான டெஸ்டிங் சமீப காலங்களில் நடைபெற்று வருகிறது.
பணி படர்ந்த சூழலில் இந்த காரின் டெஸ்டிங் நடைபெற்று வந்தது. டெஸ்டிங் காரில் சியோமி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் பயணம் செய்தார். தற்போது ஆட்டோமோடிவ் வலைதள செய்தியாளரான சாங் யென் புதிய சியோமி MS11 எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் சியோமி MS11 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் உற்பத்தி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்திய ஸ்பை படங்களில் இந்த காரின் முக்கிய அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி சியோமி MS11 மாடல் ஃபாஸ்ட்பேக் ஸ்டைல் டிசைன் மற்றும் 19-இன்ச் வீல் ரிம்கள் வழங்கப்படுகிறது.
இந்த காரின் சார்ஜிங் போர்ட் இடதுபுறம், பின்பக்கத்தில் வழங்கப்படுகிறது. சியோமி MS11 எலெக்ட்ரிக் கார்- 400 வோல்ட் வெர்ஷன், BYD லித்தியம் அயன் பாஸ்ஃபேட் பிளேடு பேட்டரி மற்றும் 800 வோல்ட் வெர்ஷன், CATL டெர்னரி க்ரின் பேட்டரி என இருவித வெர்ஷன்களில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சியோமி நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பமான ஏ.ஐ. மற்றும் தானியங்கி முறை MS11 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
இந்த பிரிவுகளில் சியோமி நிறுவனம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொண்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பங்கள் சியோமி MS11 எலெக்ட்ரிக் காரில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. தற்போதைய விவரங்களின் படி சியோமி MS11 மாடல் சுவார்ஸயத்தை ஏற்படுத்த தவறவில்லை. எனினும், வெளியீட்டின் போது இது எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில், சியோமி நிறுவனம் களமிறங்குவதன் மூலம், நுகர்வோர் மின்சாதன பிராண்டு என்ற நிலையை கடந்து, பல்வேறு துறைகளில் கால்பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
Photo Courtesy: Chang Yan