Cricket
இந்தியாவுக்காக 2-வது டி20 போட்டி- சதம் அடித்து சாதனை படைத்த அபிஷேக் ஷர்மா
ஜிம்பாப்வே-க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய அணியில் அறிமுகமானவர் அபிஷேக் ஷர்மா. இந்திய டி20 அணியின் இளம் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா இந்தியாவுக்காக தனது 2-வது டி20 போட்டியில் விளையாடினார்.
தொடரின் முதலாவது மற்றும் தேசிய அணிக்காக அறிமுகமான டி20 போட்டியில், அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா சாதனைகளை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் 33 பந்துகளில் அரைசதம் கடந்த அபிஷேக் ஷர்மா, அடுத்து எதிர்கொண்ட 13 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக குறைந்த இன்னிங்ஸ்-இல் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை அபிஷேக் பெற்றார்.
இதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இந்தியர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இன்றைய போட்டியில் இவர் விளாசிய 8 சிக்சர்களை சேர்த்து, இவர் இந்த ஆண்டில் மொத்தமாக 47 சிக்சர்களை விளாசியுள்ளார். மறுப்பக்கம் ரோகித் சர்மா 46 சிக்சர்களை அடித்துள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 234 ரன்களை குவித்துள்ளது. இந்தியா சார்பில் அபிஷேக் ஷர்மா 47 பந்துகளில் 100 ரன்களை அடித்து அவுட் ஆனார். ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்களையும், ரிங்கு சிங் 22 பந்துகளில் 48 ரன்களையும் விளாசினர்.