Cricket
அவர் நினைத்தால் அற்புதங்கள் நடக்கும் – குல்பதீன் நையிப்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியின் இரண்டாவது பாதியில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சின் போது போட்டியை தாமதப்படுத்த அந்த அணியின் பயிற்சியாளர் டக்-அவுட்-இல் இருந்தபடி செய்கை காண்பித்தார்.
உடனே களத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நையிப் சட்டென கீழே விழுந்தது, தனது காலின் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டதாக கதறினார். உடனே களத்திற்கு விரைந்த பிசியோ குழு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அவரை களத்தில் இருந்து கைதாங்கலாக வெளியே அழைத்து சென்றது.
பிறகு, மழை பெய்ததால் வீரர்களும் களத்தில் இருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் மழை நின்றுபோக வீரர்கள் மீண்டும் களத்திற்குள் வந்தனர். அப்போது காயமுற்ற நிலையில் வெளியேறிய குல்பதின் நையிப் மீண்டும் களத்திற்குள் வந்தார். வந்தவர் இரண்டு ஓவர்கள் வரை பந்துவீசியதோடு, விக்கெட் எடுக்கவும் செய்தார்.
பயிற்சியாளர் செய்கை காண்பித்ததும் காயமுற்ற நையிப், பிறகு களத்திற்குள் வந்து செயல்பட்ட விதம், அனைவரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியது. பலரும் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினர். சிலர், அவர் காயம் ஏற்பட்டதாக நடித்தார் என்றும் குற்றம்சாட்டினர். மேலும், சிலர் அவரது செயல்பாட்டுக்கு கருத்து தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில், காயமுற்ற குல்பதின் நையிப்-இன் மருத்துவர் யார் என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்பட்டது. இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் குல்பதின் நையிப் தனது பிசியோவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோடு, இவர் தான் எனது பிசியோ பிரசாந்த் பஞ்சடா, இவரால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.