Cricket
டக்குனு கோபப்பட்ட ஷகிப்.. ரிஸ்வான் தலைக்கு குறி.. ஜஸ்ட் மிஸ்சு.. திட்டிய அம்பயர்.. என்ன ஆச்சு?
பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் வங்கதேசம் அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, வரலாற்று சாதனையும் படைத்துள்ளது.
இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாளான இன்று களத்தில் நடந்த களேபரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை குறிவைத்து வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹாசன் பந்தை தூக்கி எறிந்தார். இதை கண்ட களத்தில் இருந்த அம்பயர் ஷகிப்-ஐ உடனே அழைத்து அங்கு வைத்து அவரை கண்டித்தார்.
போட்டிகளின் போது எளிதில் கோபமடையும் குணம் கொண்டவராக அறியப்படுபவர் ஷகிப் அல் ஹாசன். சிறு சிறு விஷயங்களுக்கு கனநொடியில் கோபத்தின் உச்சிக்கு செல்லும் ஷகிப், பிறகு சில நொடிகளில் மீண்டும் கூல் மோடிற்கு மாறிடுவார். இதே போன்று களத்தில் நேரத்தை வீணடிப்பதை தந்திரமாக பயன்படுத்துபவராக அறியப்படுபவர் முகமது ரிஸ்வான்.
ஓவர்களுக்கு இடையில், தேவையற்ற விஷயங்களுக்கு பந்தை எதிர்கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்வதை கிரிக்கெட் உலகம் பலமுறை உற்று நோக்கியிருக்கிறது. அப்படியாக இன்றைய (ஆகஸ்ட் 25) 5 ஆம் நாள் போட்டியின் போதும் ரிஸ்வான் பந்தை எதிர்கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொண்டார். இதை பார்த்து கோபமுற்ற ஷகிப் அல் ஹாசன், பந்தை அவரது தலைக்கு மேல் செல்வதை போல் ஆவேசமாக தூக்கி எறிந்தார்.
இதை பார்த்ததும் களத்தில் இருந்த அம்பயர் அந்த பந்தை செல்லாது என அறிவித்தார். அங்கிருந்தவர்கள் ஷகிப் என்ன செய்கிறார்? அவருக்கு என்ன ஆனது என்று பார்த்தனர். எனினும், அதை கவனக்காதவராக காணப்பட்ட ஷகிப் அடுத்த பந்தை வீசுவதற்கு ஆயத்தமானார். உடனே ஷகிப்-ஐ அழைத்த அம்பயர் அவரிடம் கோபமாக எதையோ பேசினார், அதை கேட்டதும் ஷகிப் அல் ஹாசன் ஒன்றுமில்லை பார்த்துக் கொள்கிறேன், மன்னியுங்கள் என்பது போன்ற செய்கைகளை காண்பித்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் ரிஸ்வானின் நேரத்தை வீணடிக்கும் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காமல், ஷகிப் கோபமுற்ற விஷயம் மட்டுமே பாகிஸ்தானுக்கு சாதகமாக இருந்தது. மற்றப்படி போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வங்கதேசம் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்று மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது.