Cricket
18 வயது இளம் பந்துவீச்சாளர் – நெட்சில் திணறிய பாபர் அசாம்
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி இன்னும் அதில் இருந்து மீளவில்லை என்றே தெரிகிறது. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் போட்டியை ஏற்படுத்திய பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் இந்த ஃபார்மை இழந்த நிலையில், லீக் சுற்று முடிவிலேயே தொடரில் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தது.
படுதோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறின. தோல்வியை தொடர்ந்து பல்வேறு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பாகிஸ்தான் அணிக்கு கடுமையாக வசைபாடினர். தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டிய கேப்டன் பாபர் அசாம் தான் பலரின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் இருந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஐசிசி பேட்டர்கள் பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்தில் இருந்தார். எனினும், இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மற்றும் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஏமாற்றம் அளித்தார்.
தொடர் தோல்வி குறித்து அந்நாட்டு கிரிக்கெட் அணி, கிரிக்கெட் வாரியம் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையை மேலும் மோசமாக்கும் வகையில், வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வலைபயிற்சியின் போது பேட் செய்த பாபர் அசாம் இளம் பந்துவீச்சாளர் நசீம் ஷாவின் இளம் சகோதரர் உபைத் ஷா வீசிய பந்துகளை எதிர்கொள்ளும் போது திணறினார்.
18 வயது நிரம்பிய உபைத் ஷா நெட்சில் பந்துவீசிய விதம் பாபர் அசாமை நிலைகுலைய வைத்தது. முன்னதாக பாபர் அசாம் ஃபார்ம் குறித்து பேசிய அந்நாட்டு முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, “பாபர் அசாமுக்கு ஏற்கனவே அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டது. எனினும், அவர் தன்னை நிரூபிக்க மறுத்தார்,” என்று தெரிவித்து இருந்தார்.