Connect with us

Cricket

4-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த முன்னாள் இந்திய வீரர்

Published

on

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன் தனது வீட்டு பால்கனியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். பெங்களூருவை அடுத்த கொத்தனூரில் உள்ள கனகஸ்ரீ லேஅவுட் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் டேவிட் ஜான்சன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். 52 வயதான டேவிட் ஜான்சன் நான்காவது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இவரது மரணம் இயற்கைக்கு முரணாக இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த டேவிட் ஜான்சனின் உடல் சம்புரா மெயின் ரோட்டில் உள்ள அம்பேத்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தீவிர வயிற்று வலி காரணமாக செயின்ட் பிலோமினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டேவிட் ஜான்சன், கடந்த சில காலமாக உடல்நல பாதிப்புக்கு ஆளாகி வந்துள்ளார்.

“டேவிட் ஜான்சன் உயிரிழப்பு தொடர்பாக அவரது குடும்பத்தார் எவ்வித சந்தேகமும் அடையவில்லை. அவர் தானாகவே கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது. எனினும், இதற்கு எவ்வித சாட்சியமும் இல்லை. இதோடு, தற்கொலை குறிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை,” என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

“அவர் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்,” என்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க அதிகாரி தெரிவித்தார்.

வேகப்பந்து வீச்சாளரான டேவிட் ஜான்சன் 125 முதல்தர விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 33 போட்டிகளில் 41 லிஸ்ட் ஏ வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். கர்நாடக அணியின் அசைக்க முடியாத பந்துவீச்சாளர்கள் கூட்டணியில் அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் டொட்டா கணேஷ் ஆகியோருடன் டேவிட் ஜான்சன் இடம்பெற்று இருந்தார்.

google news