Cricket
இந்திய அணி பாகிஸ்தான் போகக்கூடாது.. முன்னாள் பாக். வீரர் அதிரடி..!
2025 ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் இந்திய அணி பாகிஸ்தான் வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தனிஷ் கனெரியா தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தனிஷ் கனெரியா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது. மாறாக இந்திய அணி விளையாட துபாய் சிறந்த இடமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தானில் தற்போதைய சூழலை பார்க்கும் போது, இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்றுதான் நான் கூறுவேன். பாகிஸ்தானும் இந்த விஷயம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். இதன் பிறகு ஐசிசி இதுகுறித்து முடிவு எடுக்கும். பெரும்பாலும் இந்த தொடரை பொருத்தவரை ஹைப்ரிட் முறை தான் சரியாக இருக்கும். இப்படியான முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு துபாய் சிறந்த தேர்வாக இருக்கும்.”
“இவ்வாறு நடக்கும் போது எதிர்பார்ப்பு அதிகரிக்கும், எல்லோரின் வீடியோக்களுக்கும் லைக்குகள் குவியும், டிக்கெட்டுகளும் விற்றுப் போகும். உண்மை நிலையை பார்க்கும் போது, ஹைப்ரிட் முறை சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று. அதன்பிறகு தான் மரியாதை எல்லாம். இதைதவிர ஏராளமான விஷயங்கள் உள்ளன.”
“பிசிசிஐ சிறப்பான வேலையை செய்வதாக நினைகக்கிறேன். இறுதி முடிவை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். அந்த வகையில், இந்த விவகாரம் ஹைப்ரிட் முறையில் தொடர் நடைபெறும் என்று தான் நான நினைக்கிறேன்,” என்று தனிஷ் கனெரியா தெரிவித்தார்.