Cricket
பாக். கிரிக்கெட் வாரியம் ஒரு சர்க்கஸ், அங்குள்ளவங்க ஜோக்கருங்க.. முன்னாள் வீரர் விளாசல்..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் படு தோல்வி அடைந்ததை விட, சமீபத்திய டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றி பெற்றது.
மேலும், இரு போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கைப்பற்றி இருக்கிறது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வங்கதேசம் சம்பவம் செய்து வெற்றி பெற்றது பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியது. வங்கதேச வெற்றிக்கு கிடைத்த பாராட்டை விட பாகிஸ்தான் அணிக்கு ஏராளமான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இருந்து கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டு விட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாசிர் அராஃபத் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அதன் பணியாளர்களை கடுமையாக சாடியுள்ளார்.
“இந்த சீரிஸ் முடிகிறது. உங்களது பலவீனங்கள் அம்பலமாகியுள்ளன. ஃபிட்னஸ் பிரச்சினை, யுத்திகளில் பிரச்சினை மற்றும் பிட்ச்கள். ஜேசன் கிலெஸ்பி மற்றும் பயிற்சியாளர்கள் ஆஸ்திரேலியா செல்வதாக அறிகிறேன். நீங்கள் ஒருநாள் தொடரை நடத்துகின்றீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு சர்கஸ்.”
“அதில் இருப்பவர்கள் ஜோக்கர்கள், இது மிகப்பெரிய ஜோக். இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் வரவிருக்கிறது, நீங்கள் ஒருநாள் தொடருக்கான வீரர்களை அழைத்து வருகின்றீர்கள். ஷான் மசூத் நமது வீரர்கள் கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகளாக முதல்-தர கிரிக்கெட் விளையாடவே இல்லை என்று கூறுகிறார். இங்கிலாந்துக்கு எதிராக பெரிய தொடர் வரவிருக்கிறது, ஆனால் நீங்கள் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றீர்கள்.”
“இது எனக்கு சர்கஸ் போன்று தெரிகிறது. அங்கு பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் ஜோக்கர்கள், அவர்களது முடிவுகள் அனைத்துமே ஜோக்குகள் தான்,” என்று யாசிர் அராஃபத் தெரிவித்தார்.