Cricket
தைரியம் இருந்தா வாங்க.. முன்னாள் பாக். வீரர் சவால்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தன்விர் அகமது இந்திய அணிக்கு எதிராக கடுமையான சொற்களை பயன்படுத்தி இருக்கிறார். பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் பங்கேற்க இந்திய அணி அந்நாட்டிற்கு செல்வது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பாக இரு அணிகளின் முன்னாள் வீரர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இவரது இந்த கருத்துக்கு பதில் அளித்த தன்விர் அகமது, பிசிசிஐ மற்றும் இந்திய அணி பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக பாகிஸ்தான் மட்டுமே இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“நாங்கள் சிங்கங்கள். நாங்கள் உங்களது குகைக்குள் வந்து உங்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறோம். உங்களுக்கு தைரியம் இருந்தால், நீங்கள் இங்கு வந்து விளையாடுங்கள். நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு மற்றும் தேவையான அனைத்தையும் வழங்கிறோம். ஒருமுறை வாருங்கள்,” என்று தன்விர் அகமது கூறியுள்ளார்.
கடைசியாக 2006 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மும்பை தாக்குதல்களுக்கு பிறகு, பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட அனுமதிப்பதில்லை. தற்போது பாகிஸ்தான் 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்த இருக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணிக்கான போட்டிகளை தனியே வேறொரு நாட்டில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக 2023 ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்திய போதும் இந்திய அணி அங்கு செல்லாமல், தனது போட்டிகளை இலங்கையில் நடத்த கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.